Published : 13 May 2024 10:20 AM
Last Updated : 13 May 2024 10:20 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 15.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5.07 சதவீதம் பதிவாகியுள்ளது.
இன்று ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இவற்றில் காலை 9 மணி நிலவரப்படி ஆந்திரப் பிரதேசம்:9.05%, பிஹார்: 10.18%, ஜம்மு காஷ்மீர்:5,07%, ஜார்க்கண்ட்: 11.78%, மத்தியப் பிரதேசம்: 14.97%, மகாராஷ்டிரா: 6.45%, ஒடிசா: 9.23%, தெலங்கானா: 9.51%, உத்தரப் பிரதேசம்: 11.67%, மேற்குவங்கம்: 15.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
96 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கூடவே ஆந்திர மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒடிசாவின் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில் காலை 9 மணி நிலவரப்படி ஆந்திரப் பிரதேசத்தில் 9.21%, ஒடிசாவில் 9.02% சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கை: முன்னதாக இன்று காலை ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிஆந்திர மாநிலம் குண்டூரில் சந்திரபாபு நாயுடு தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “வாக்களிப்பது நம் கடமை. வாக்களிப்பதன் மூலம் நாம் வளமான எதிர்காலத்துக்கு உரிமை கோரலாம். நான் இதுவரையான தேர்தல்களில் இத்தகைய கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது மக்கள் ஜனநாயகத்தையும், தங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களிக்கின்றனர். சென்னை, பெங்களூரு என பல ஊர்களில் வேலை நிமித்தமாக இருந்தாலும் வாக்களிக்க வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி.” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT