Published : 13 May 2024 05:39 AM
Last Updated : 13 May 2024 05:39 AM
அகர்தலா: வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்குள் ஊடுருவிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மிசோரம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.அந்த வகையில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் வங்கதேசத்தில் இருந்து ஒரு கும்பல் இந்தியாவின் திரிபுரா மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக மாநில போலீஸாருக்கு மத்திய உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இதன்பேரில் திரிபுரா முழுவதும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.
கடந்த சனிக்கிழமை மாலை திரிபுரா தலைநகர் அகர்தலா ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். வங்கதேச கும்பலுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட திரிபுராவை சேர்ந்த செந்து குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அகர்தலா ரயில்வே போலீஸ் அதிகாரி தபஸ் தாஸ் கூறும்போது, "வங்கதேசத்தின் கோமிலா பகுதியில் இருந்து 8 பேரும் திரிபுராவின் சோன்புரா பகுதிக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளை செந்து குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
சோன்புராவில் இருந்து 8 பேரும் வாகனத்தில் அகர்தலா வந்துள்ளனர். இங்கிருந்து மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டு இருந்தனர். உளவுத் துறையின் தகவலின்பேரில் 8 பேரையும் கைது உள்ளோம்.
எல்லையில் எப்படி ஊடுருவினார்கள், எதற்காக இந்தியாவுக்கு வந்தனர், யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பன குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 8 பேரின் கைது குறித்து வங்கதேச தூதரகத்தில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...