Published : 13 May 2024 04:39 AM
Last Updated : 13 May 2024 04:39 AM
புதுடெல்லி: பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 10-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் அவர் நேற்று முன்தினம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முதல்வர் கேஜ்ரிவால் தலைமை வகித்தார். அப்போது, மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக எம்எல்ஏக்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உச்ச நீதிமன்றம் எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அதிசயமாகவே பார்க்கிறேன். சிறையில் இருந்தபோது குடிநீர், மின்சாரம், மருத்துவ சேவை மக்களுக்கு முறையாக கிடைக்கிறதா என்பது குறித்து மட்டுமே என் சிந்தனை இருந்தது.
டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, கட்சியை அழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது. அதற்காகவே ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். என்னை கைது செய்து கட்சியை உடைக்க சதி செய்தனர். ஆனால், பாஜகவின் முயற்சி, சதி வெற்றி பெறவில்லை. என்னை கைது செய்ததால் முன்பைவிட ஆம் ஆத்மி பலம் அடைந்திருக்கிறது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்குவாங்க பாஜக தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டது. அந்த முயற்சி பலன் அளிக்காததால் சிலருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மிஎம்எல்ஏக்கள் நங்கூரம்போல கட்சியில் உறுதியாக நின்றனர். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒக்லா எம்எல்ஏ அமானுதுல்லா கான் பங்கேற்கவில்லை. சமீபத்தில் டெல்லி பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக அவர் மீதும், அவரது மகன் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதன்காரணமாக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அமானுதுல்லா கான் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மோடியின் அரசியல் வாரிசு யார்? முன்னதாக செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயது ஆகிறது. வயதை காரணம் காட்டி அத்வானியை அரசியலில் இருந்து ஓய்வு பெற செய்தனர். இதேபோல பிரதமர் மோடியும் ஓய்வு பெறுவாரா என்று ஏற்கெனவே கேள்வி எழுப்பினேன்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, ‘75 வயதில் மோடி ஓய்வு பெற மாட்டார். நாட்டுக்காக தொடர்ந்து சேவை செய்வார்’ என்று தெரிவித்துள்ளது. தனது அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது குறித்து பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.
பாஜக மூத்த தலைவர்கள் சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, ரமண் சிங் ஆகியோரின் அரசியல் வாழ்க்கைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்போதைய நிலையில் 2-வது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். அவரை 2 மாதங்களில் பதவியில் இருந்து நீக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி பகிரங்கமாக கேள்வி எழுப்பினேன்.
75 வயதில் பிரதமர் மோடி ஓய்வு பெற மாட்டார் என்று மட்டுமே பாஜக விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் நீக்கப்பட மாட்டார் என்று பாஜக உறுதி அளிக்கவில்லை. அப்படியானால், அடுத்த 2 மாதங்களில் அவர் முதல்வர் பதவியை இழப்பார் என்பது உறுதியாகிறது.
ஒரே நாடு, ஒரே தலைவர் திட்டத்தில் பாஜகவில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுகின்றனர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம்? எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்றுள்ளது. அதன்படி, டெல்லியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அதேநேரம், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்துகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. திஹார் சிறையில் இருந்துஜாமீனில் வந்துள்ள முதல்வர் கேஜ்ரிவால், தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார். பஞ்சாபில் எதிர்க்கட்சியான காங்கிரஸை விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் கேஜ்ரிவால் இருக்கிறார். வரும் ஜூன் 1-ம் தேதி பஞ்சாபில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவாலின் பிரச்சார வியூகம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT