Published : 13 May 2024 04:25 AM
Last Updated : 13 May 2024 04:25 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில்,66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம்தேதி 88 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதில், 66.71 சதவீத வாக்குகள் பதிவானது. 3-ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. அதில், 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுநடைபெறுகிறது. ஆந்திராவில்மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
முக்கிய வேட்பாளர்கள்: உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் களம் காண்கிறார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் ஆளும்திரிணமூல் சார்பில் மஹுவா மொய்த்ராவும், பாஜக சர்பில் அம்ரிதா ராயும் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பகரம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பிஹாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைஸி களம் காண்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை மாதவி லதா களமிறங்கி உள்ளார்.
4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 96 தொகுதிகளுக்கு மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.92 லட்சம் வாக்குச் சாவடிகளுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 17.70 கோடி பேரில் 8.73 கோடி பேர் பெண்கள்.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் மொத்தம் 543-ல் 379 மக்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.
பாதுகாப்பு தீவிரம்: 4-ம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் 4,500 தமிழக போலீஸார்,1,614 முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.06 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT