Published : 26 Apr 2018 08:34 AM
Last Updated : 26 Apr 2018 08:34 AM
ஆந்திராவில் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, ஆட்டோ ஓட்டுநர்களிடம் போலீஸார் நேற்று அபராதம் வசூலித்தனர். இதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸாரைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் நகர தலைவர் அஜய் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லூர் நகரில் இப்போது போக்குவரத்து போலீஸாரின் அராஜகம் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில், ஆட்டோ ஓட்டுநர்கள்கூட ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். அதுவும், ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் மட்டும் ஒரே நாளில் 6 இடங்களில் அபராதம் வசூலித்துள்ளனர். இதனால் எங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிமீறல், தகுந்த உரிமம் இல்லாதது, வாகனத்தின் ஆவணங்கள் சரியாக இல்லாதது ஆகிய காரணங்களுக்காக அபராதம் வசூலிக்கலாம். ஆனால், ஹெல்மெட் அணியாத காரணத்தால் அபராதம் வசூலிப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை. சில கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனங்கள் நெல்லூரிலும் சேவையை தொடங்கி உள்ளதால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் போலீஸார் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அஜய் குமார் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள், இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என உறுதி அளித்ததால், ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT