Published : 12 May 2024 04:47 PM
Last Updated : 12 May 2024 04:47 PM
பிரதாப்காரி: அணுகுண்டு அச்சுறுத்தலுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா என்று அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கருத்துகளுக்கு அவர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மணி சங்கர் அய்யரும், பரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அந்த நாட்டை நாம் மதிக்க வேண்டும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் பாபா, நீங்கள் அணுகுண்டுக்கு பயப்பட விரும்பினால் பயப்படுங்கள். நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. அதை நாங்கள் எடுத்தே தீருவோம்” என்றார்.
அமித் ஷா குறிப்பிடும் மணிசங்கர் அய்யரின் வைரல் வீடியோவில் அவர், “பாகிஸ்தான் ஒரு இறையாண்மை உள்ள நாடு இந்தியா அந்நாட்டை மதிக்க வேண்டும். அதனிடம் அணு குண்டு உள்ளது. ஒரு பைத்தியக்காரன் அங்கு ஆட்சிக்கு வந்து அவன் இந்தியாவின் மீது அணுகுண்டு வீசினால் அது இந்தியாவுக்கு நல்லதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
மணி சங்கர் அய்யரின் இந்தக் கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கட்சி, அவரின் பேச்சு கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும், அதிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்தித்திருந்தது. இதனிடையே அந்தப் பேட்டி பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று மணிசங்கர் அய்யர் விளக்கியிருந்தார்.
மணிசங்கர் அய்யரைப் போல் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும் சமீபத்தில் பாகிஸ்தானின் அணுகுண்டு பற்றி பேசியிருந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-ன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்ற பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பரூக் அப்துல்லா, “பாகிஸ்தான் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. அந்நாட்டிடம் அணுகுண்டு உள்ளது. அதை நம்மீது வீசலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோசம்பியில் பேசிய அமித் ஷா, மக்கள் மூன்று வெற்றிகளை உறுதி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறுகையில், “முதல் வெற்றியாக, நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். இரண்டாவது வெற்றியாக, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியை மூன்றாவது முறையாக தேற்கடிப்பது, மூன்றாவது வெற்றியாக எனது நண்பர் (வினோத்) சோன்கரை மூன்றாவது முறையாக எம்.பி.,யாக வெற்றியடைய வைப்பது" என்றார். கோசாம்பி மக்களவைத் தொகுதிக்கு வரும் 20-ம் தேதி ஐந்தாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT