Published : 12 May 2024 02:14 PM
Last Updated : 12 May 2024 02:14 PM

பாஜக ஆட்சியில் அடுத்தது என்ன? - பிரதமர் மோடி நேர்காணல்

புதுடெல்லி: என்டிஏ கூட்டணி மக்களுக்கு அதிகாரங்களை வழங்க விரும்புகிறது, எதிர்க்கட்சிகளோ மக்களின் வளங்களை திருடப்பார்க்கின்றன என்று பிரதமர் மோடி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நாளை (திங்கள்கிழமை) நடக்க இருக்கிறது.

இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வியூகம், அடுத்த முறையும் மோடி அரசே அமைவதற்கான அவசியம், தென் மாநிலங்கள் மீதான கவனம், மத அரசியல் விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆங்கில ஊடக நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார்.

அதன் தொகுப்பு வருமாறு > இந்தமுறை தென்மாநிலங்களில், நீங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளீர்கள். குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் பாஜக வெற்றி பெற வேண்டிய கடைசி இடங்களாக பார்க்கப்படுகின்றன. என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் எப்போதும் வேலை செய்வதில்லை. இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனேயே நாங்கள் வேலை செய்கிறோம். எங்களைப் பொறுத்த வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சேவை செய்ய வேண்டும்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுடனான எங்களின் தொடர்பு புதிய ஒன்றில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்குள்ள மக்களுக்கும் சேவை செய்வதற்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். பல தசாப்தங்களாக எங்களின் கார்யகர்த்தாக்கள் சுயநலமின்றி அங்கு வேலை செய்து வருகின்றனர். அந்தத் தியாகத்தில் பல தங்களின் இன்னுயிரையும் தந்துள்ளனர்.

பல்வேறு தென்மாநில மக்கள் இண்டியா கூட்டணியின் ஊழல், சமரச அரசியல் மற்றும் குடும்பத்தை முன்னிறுத்தும் அரசியலால் சோர்வடைந்து விட்டார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில் ஆட்சி சீர்குலைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கர்நாடகாவில் ஊழலுடன் காங்கிரஸ் கட்சியின் தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. சில மாதங்களிலேயே கருவூலத்தை காலி செய்து, மாநிலத்தை திவாலாக்கும் நிலைக்கு காங்கிரஸ் கொண்டுவந்துள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியல் நிலவும் தமிழகத்திலும் இதேதான் நிலைமை.

மறுபுறம், மோடியின் உத்தரவாதம் எவ்வாறு திறம்படச் செயல்படுகிறது என்று மக்கள் பார்க்கிறார்கள். மக்கள் எங்களின் பணிகள், அவர்களின் வளர்ச்சிக்கான எங்களின் அர்ப்பணிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை, தூய்மையான அரசு ஆகியவைகள் குறித்த எங்களின் பணிகளை பார்த்திருக்கிறார்கள். இந்த முறை எங்களின் பணி தீர்மானிக்க முடியாததாக இருக்கும்.

பாஜக குறித்து ஒரு நேர்மறையான உற்சாகம் இருப்பதை நான் பார்க்கிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த எங்களின் செய்தி தென்னிந்திய மக்களிடம் வலுவாக எதிரொலித்திருக்கிறது.

> கர்நாடகாவில் பிரஜ்வல் ரேண்ணாவின் வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. அங்கு தேர்தல் முடிந்து விட்டது. சட்டம் தனது கடமையைச் செய்யும். உங்களின் கூட்டணியில் இருக்கும் மஜதவை ஆதரித்து ஹசனில் நீங்கள் பிரச்சரம் செய்திருக்கிறீர்கள். என்றாலும் பிரதமராக இந்த சர்ச்சை குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

சட்டத்தின் பார்வையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது சந்தேஷ்காலியாக இருந்தாலும் கர்நாடகாவில் இருந்தாலும் இதுபோன்ற கேவலமான செயல்களைச் செய்தவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் கடுமையான விளைவுகளையும், தண்டனைகளையும் பெற்றாக வேண்டும். இந்தியாவின் எந்தப் பகுதியாக இருந்தாலும் அங்கு சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவது மாநில அரசின் கடமை.

> நமது தேர்தல் பிரச்சாரங்கள் காலத்துக்கு ஏற்ப மாறத் தவறி விட்டதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில் இன்னும் நாம் மதம், சாதி மற்றும் இலவசங்கள், இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

தயவுசெய்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பேச்சுக்கள் குறித்து நீங்கள் ஒரு பகுப்பாய்வு செய்யுங்கள், அதில் யார் முற்போக்கான கருத்துகளை பேசுகிறார்கள், யார் பிற்போக்குத்தனங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். இன்றைய ஏஐ யுகத்தில் இதனைச் செய்வது மிகவும் எளிது.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரிடமிருந்து இடஒதுக்கீட்டை பறித்து, தனது வாக்குவங்கி அரசியலுக்காக, அரசியல் அமைப்புக்கு விரோதமாக மதத்தின் அடிப்படையில் வழங்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கும் என்றால் அது நிச்சயம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில் மவுனமாக இருப்பது தவறானது.

காங்கிரஸ் கட்சிதான் மதம் மற்றும் பிரிவினைவாதம் போன்றவைகளை தனது கொள்கைகளாகக் கொண்டு வந்தது. அவர்களின் ஆபத்தான கொள்கைகள் குறித்து மேலே சொன்ன சமூக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் கட்சி என்ற அடிப்படையில் அந்த கவலைகளை நாங்களும் வெளிப்படுத்துகிறோம்.

காங்கிரஸ் கட்சியால் பதில் அளிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் இவை. காலப்போக்கில் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை அல்லது தலைவர்களின் பேச்சை நீங்கள் பார்த்தால், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது போன்றவைகள் பற்றி பேசிய ஒரே கட்சியாக நாங்கள் மட்டும் தான் இருப்போம்.

> நரேந்திர மோடி... அடுத்து என்ன?

நான் பாரத மாதாவின் ஒரு சேவகன். நான் எனக்காக எதையும் எப்போதும் யோசித்தது இல்லை. 140 கோடி மக்களைக் கொண்ட எனது குடும்பத்தின் ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற என்னால் என்ன செய்யமுடியும் என்று நான் யோசித்து வருகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக செய்தது வெறும் ட்ரெய்லர் மட்டுமே. இன்னும் நிறைய செய்ய வேண்டியவை இருக்கின்றன.

தேர்தல் களத்துக்கு செல்வதற்கு முன்பே அடுத்த 100 நாட்களுக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு அனைத்து அரசுத் துறைகளிடமும் கூறியிருந்தேன். எங்களின் சங்கல்ப பத்திரம் அடுத்த ஐந்து ஆண்டுக்கான வளர்ச்சிப் பாதையை வழங்கும். 2047-ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத்துக்கான தொலை நோக்குப் பார்வைகளையும் நாங்கள் வகுத்து வருகிறோம். அதற்கான அடித்தளம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு விட்டது. எனவே நாங்கள் எங்களின் பணிகளை முடித்துவிட்டோம்.

எங்களின் முதல் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக்கிய 60 ஆண்டு கால இடைவெளியை நிரப்பினோம். இரண்டாவது ஆட்சியில் இந்தியாவை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம். மூன்றாவது ஆட்சி காலம் இதுவரை கண்டு இருக்காத வகையில் வளர்ச்சிக்கான சகாப்தமாக இருக்கும்.

GYANM மாதிரியை வலுப்படுத்தவும், கட்டமைக்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன். அது நமது ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண் சக்திகள் மற்றும் மத்திய வர்க்கத்து மக்களை விக்சித் பாரத்-ன் சிற்பிகளாக மாறும் வகையில் அதிகாரம் அளிக்கிறது.

> வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் குறித்து சரியான விவாதங்கள் இல்லை என்று பலர் கருதுகின்றனர். இதுகுறித்து உங்களின் கருத்து என்ன?

நமது அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இரண்டாவது ஆட்சி காலத்தில், ஆண்டு சராசரி பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது அனைவருக்கும் தெரியும். யுபிஏ இரட்டை இலக்க பணவீக்கத்தை வழங்கிய நிலையில், கோவிட் தொற்று இருந்த நிலையிலும் என்டிஏ அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி நாம் பேசினால் அதிலும் நல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு வேலைகளை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நாம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவக்கும் உத்தரவாதத்தை வழங்கியுள்ளன. இந்தப் பிரச்சாரம் 10 லட்சம் அரசு வேலைகளை உருவாக்கும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்த வளர்ச்சிப் பணிகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். முன்பு மொபைல் போன் உற்பத்தியில் நாம் எங்கும் இல்லை. ஆனால் இப்போது உலகின் இரண்டாது மொபைல் போன்கள் உற்பத்தியாளராக உள்ளோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மொபைல் போன் இறக்குமதியளார்களாக இருந்த நாம் இன்று ஏற்றுமதியாளர்களாக மாறியிருக்கிறோம். வந்தே பாரத் ரயில்கள், பொம்மை உற்பத்தி பற்றியும் நீங்கள் பேசலாம். இதுபோல், பல விஷயங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.

இந்தமுறை ஸ்டார்ட் அப் மற்றும் இ-வாகனங்கள் போன்ற துறைகள் வேகமெடுத்துள்ளன. இன்று உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக நாம் இருக்கிறோம். 2014-ல் 100 அல்லது அதற்கு அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்தன. அதன் எண்ணிக்கை இன்று 1,00,000-ஐ நெருங்கியுள்ளது. இவைகளால் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவகியுள்ளன.

இவை தவிர சுதந்திர இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பெரிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் உள்கட்டமைப்புத் துறையில் சாதனை அளவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளன. சாதனை வேகத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எங்களின் ஆட்சிக் காலத்தில் பெரு நகரங்கள் அளவிலான நகரங்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளன. இந்த பெரிய அளவிலான உள்கட்டமைப்பு பெருக்கம் பல துறைகளில் வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

சிறுகுறு தொழில் துறைகளையும் நாங்கள் ஊக்குவித்துள்ளோம். முத்ரா கடன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் முதல் முறையாக தொழில் தொடங்கி உள்ளனர். 2017 -2023 காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 56 சதவீதமாக அதிகரித்துள்ளதாக PLFS தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவில் 3.2 சதவீதமாக உள்ளது.

இன்று நமது நாடு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள்தான்.

நான் சில உண்மைகளையும் புள்ளி விவரங்களையும் தான் பகிர்ந்துள்ளேன். 2014-க்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்தால் வளர்ச்சிக்கான அறிகுறியோ, வேலைவாய்ப்புகளோ இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி அந்தப் நேர்காணலில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x