Published : 12 May 2024 07:10 AM
Last Updated : 12 May 2024 07:10 AM
புதுடெல்லி: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர் என்று டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதால் நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லி திஹார் சிறையில் இருந்து வெளியே வந்தார். முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே அவர் ஈடுபடலாம் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த சூழலில் முதல்வர் கேஜ்ரிவால் நேற்று காலை டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடுநடத்தினார். பின்னர் ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்துக்கு சென்றஅவர், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த காலத்தில் இரு மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைத்து உள்ளோம். எதிர்காலத்தில் பாஜகவுக்கு போட்டியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதை உணர்ந்துஎங்கள் கட்சியை அழிக்க பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். என்னையும் சிறையில் அடைத்தனர்.
எங்களை கைது செய்து, சிறையில் தள்ளியதன் மூலம் ஆம் ஆத்மியை அழித்துவிடலாம் என்று பாஜக பகல் கனவு காண்கிறது. ஆம் ஆத்மி என்பது கொள்கை, கோட்பாடு கொண்ட கட்சி ஆகும். அதனை யாராலும் அழிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைவோம்.
ஒரே நாடு, ஒரே தலைவர் என்ற திட்டத்தை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதன்படி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.
எனவே, சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று பொதுமக்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT