Last Updated : 12 May, 2024 07:05 AM

2  

Published : 12 May 2024 07:05 AM
Last Updated : 12 May 2024 07:05 AM

2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்: ம.பி.யில் காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சைக்குரிய வாக்குறுதி

புதுடெல்லி: இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமதியாகக் கிடைக்கும் என்று மத்தியபிரதேச மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நியாயப்பத்திரம் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்காக மஹாலஷ்மி யோஜ்னா எனும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஏழைப்பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து ம.பி. மாநிலத்தின் ரத்லாம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் காந்தி லால் புரியா பேசியுள்ளது தற்போது சர்ச்சைக்கு உரியதாகி விட்டது.

இது குறித்து ரத்லாமின் சைலானாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது முன்னாள் மத்திய இணை அமைச்சரும், ம.பி.யின்காங்கிரஸ் எம்எல்ஏவுமான காந்தி லால் புரியா பேசும்போது, ‘எங்கள்தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.1 லட்சம் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இரண்டு மனைவிகள் வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சமாகக் கிடைக்கும். ஏனெனில், அதில் இருவருமே இந்த திட்டத்தில் பலனடைவார்கள்’ என்ற ரீதியில் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய வேட்பாளர் காந்தி லாலின் இப்பேச்சின் போது மேடையில், ம.பி.யின் முன்னாள் முதல்வரான திக்விஜய்சிங், மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜீத்துபட்வாரி ஆகியோரும் அமர்ந்திருந்தார். இதையடுத்து பேசிய ஜீத்து பட்வாரியும், தம் கட்சி வேட்பாளர் காந்தி லாலின் பேச்சை ஆமோதித்து பாராட்டிப் பேசினார்.

ஆணையத்தில் புகார்: இந்நிலையில், காந்தி லாலின் பேச்சு தொடர்பான காட்சிப்பதிவை தமது சமூகவலைதளப் பக்கத்தில் பாஜகவின் செய்தித்தொடர்பாளரான நரேந்திர சலூஜா, பதிவேற்றி கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அவர் புகார் அளித்திருப்பதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரத்லாம் தொகுதியில் காந்தி லாலை எதிர்த்து பாஜகவின் சார்பில் அனிதா சவுஹான் போட்டியிடுகிறார். இவர், ம.பி. மாநில வனத்துறை அமைச்சரான நாகர் சிங் சவுஹானின் மனைவி. இங்கு நாளை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x