Published : 11 May 2024 05:49 PM
Last Updated : 11 May 2024 05:49 PM

“இந்திரா காந்தியின் தைரியத்தை பிரதமர் மோடி உள்வாங்க வேண்டும்” - பிரியங்கா காந்தி

நந்தூர்பார் (மகாராஷ்டிரா): தைரியம், உறுதிப்பாடு ஆகிய பண்புகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உள்வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பேசினார்.

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வதேரா, "வெற்றுப் பேச்சுக்களை நரேந்திர மோடி பேசி வருகிறார். அவரது பேச்சில் எந்த கனமும் இல்லை. தைரியம், உறுதிப்பாடு ஆகிய பண்புகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உள்வாங்க வேண்டும்.

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாஜக மதிக்கவில்லை. சபரியை(ராமாயணத்தில் ராமருக்கு உணவு வழங்கிய பெண்) மதிப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உன்னாவ் மற்றும் ஹத்ராஸில் பல பெண்கள் கொடுமைகளுக்கு ஆளானபோது அவர் ஏன் அமைதியாக இருந்தார்? பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தியபோது அவர் ஏன் தனது குரலை உயர்த்தவில்லை. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபரின்(பிரிஜ் பூஷன் சரண் சிங்) மகனுக்கு பாஜக டிக்கெட் வழங்கியது ஏன்?

எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள 4,000 கி.மீ தூரம் நடந்து மக்களிடம் வருபவர் வேண்டுமா? அல்லது யாருடைய குர்தாவில் தூசியின் அடையாளங்களைக் காணவில்லையோ, உங்கள் அருகில் வர யார் பயப்படுகிறாரோ அப்படிப்பட்ட ஒரு தலைவர் வேண்டுமா? உங்கள் கண்ணீரைத் துடைக்கும் தலைவரா அல்லது மேடையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவரா?

அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் உண்மையைப் பேசும் அஞ்சாத தலைவர் வேண்டுமா அல்லது முழுவதும் பொய் சொல்பவர் தலைவராக வேண்டுமா. கொள்கை, சேவை மற்றும் அர்ப்பணிப்பு அரசியல் வேண்டுமா அல்லது அதிகாரம் மற்றும் தற்புகழ்ச்சி அரசியல் வேண்டுமா?" என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x