Published : 11 May 2024 02:25 PM
Last Updated : 11 May 2024 02:25 PM

பாலகோட் தாக்குதல் குறித்து தெலங்கானா முதல்வர் கேள்வி: பாஜக பதிலடி

ரேவந்த் ரெட்டி | கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் காங்கிரஸை பாரதிய ஜனதா கட்சி சாடியுள்ளது. மேலும் நமது ராணுவத்தின் வலிமையை காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதற்காக அக்கட்சி இந்தியாவை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று விமர்சித்துள்ளது.

முன்னதாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய போது புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், “நரேந்திர மோடிக்கு எல்லாமே அரசியல் தான். அனைத்துமே தேர்தலில் வெற்றி பெறுவதற்காகதான். அவர் சிந்தனை முறை நாட்டுக்கு நல்லது இல்லை. நரேந்திர மோடியையும், பாஜகவையும் விரட்டும் காலம் வந்துவிட்டது.

அவர்களிடம் எதைப் பற்றியாவது கேளுங்கள் அவர்களது பதில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதாகவே இருக்கும். புல்வாமா தாக்குதலை தடுக்க அவர்கள் தவறிவிட்டார்கள். உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் நடந்த பாலகோட் தாக்குதலில் இருந்து அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களைப் பெற மோடி முயன்றார். நான் அவரிடம் த கேட்க விரும்புகிறேன், அந்தத் தாக்குதலிம்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? புல்வாமா தாக்குதல் சம்பவம் நடக்க ஏன் அனுமதித்தீர்கள்? நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்கள்வசமிருந்த IB and R&AW அமைப்புகளின் உதவியை ஏன் நாடவில்லை?” அது உங்களின் தோல்வி.

நம்மிடம் கூறப்பட்டது போல வான்வழித் தாக்குல் நடந்ததா என்பது பற்றி யாருக்கும் உறுதியாக தெரியாது. உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு எங்களிடம் (காங்கிரஸிடம்) இருந்திருந்தால் அதை நாங்கள் வேறு யாரின் கைகளிலும் கொடுத்திருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானில் இருந்து ஆதரவு பெறுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “இவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் இல்லை, அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்காக நன்கு திட்டமிடப்பட்டவை என்று இப்போது தெளிவாகிவிட்டது. தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு ‘க்ளீன் சிட்’ வழங்குவது மட்டும் இல்லாமல், இந்தியாவையும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.

பிரதமர் மோடியை எதிர்க்கும் அவர்களின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தின் தைரியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தீவிரவாதிகள் விவகாரத்தில் இந்தியாவை கேள்விக்குள்ளாக்குகிறது. சர்வதேச அரங்குகளின் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை (பாகிஸ்தான்) பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறையை அவர்கள் (காங்கிரஸ்) வழங்குகிறார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கம். இதற்காகவே அவர்கள் பாகிஸ்தானிடமிருந்து ஆதரவினை பெறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாஜகவின் பிரகாஷ் ரெட்டி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்து தேச நலனுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “அணு ஆயுதம் வைத்திருப்பதால் பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறிய பழைய வீடியோவை வெள்ளிக்கிழமை வெளியிட்டு பாஜக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x