Published : 11 May 2024 08:40 AM
Last Updated : 11 May 2024 08:40 AM

கடைசி நிமிடத்தில் ஓடோடி வந்து பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்த உ.பி. பாஜக வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடியும் தருவாயில் உத்தர பிரதேசம் தேவரியா தொகுதிக்கு ஓடோடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் பாஜக வேட்பாளர் ஷஷாங் மானி திரிபாதி.

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடைசிக் கட்டமாக தேவரியா உட்பட 13 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15 ஆம் தேதியாகும்.

தேவரியா தொகுதியில் பாஜக சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். இதனிடையே துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமை தாங்கிய நிகழ்ச்சி ஒன்றில் அன்றைய தினம் பங்கேற்கச் சென்றார்.

அந்த விழா நிறைவு பெற தாமதமானதால் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் புபேந்திர சிங் உள்ளிட்ட கட்சிக்காரர்களையும் கூட்டிக்கொண்டு 100 மீட்டர்வரை ஓடோடிச் சென்று கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து முடித்தார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் ஷஷாங் மானி திரிபாதி கூறுகையில்: ஐஐடியில் படித்த நாட்களிலிருந்து நானொரு ஓட்டப்பந்தய வீரன். அன்று பயின்றது இன்று உதவியது. என்றார்.

ஷஷாங் மானியின் பாட்டனார் சூரத் நரைன் மானி திரிபாதி ஐஏஎஸ் அதிகாரியாகவும் பின்னாளில் உபியின் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர். இவரது தந்தை பிரகாஷ் மனி திரிபாதி 1996ஆம் ஆண்டில் தேவரியா தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் திகழ்ந்தவர். அந்த வகையில் ஷஷாங் மானி வாரிசு அரசியல் லிஸ்டை சேர்ந்தவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x