Published : 11 May 2024 04:50 AM
Last Updated : 11 May 2024 04:50 AM

இளம்பெண் அகால மரணமடைந்ததால் அரளி மலருக்கு தடை விதிப்பு: கேரளாவின் 2500 கோயில்களில் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் சூரியா சுரேந்தர் (24)எதேச்சையாக அரளி மலர் இதழ்களை சாப்பிட்டதால் அகால மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக, நர்சிங் பட்டதாரியான சூரியா சுரேந்திரனுக்கு பிரிட்டனில் செவிலியர் பணி கிடைத்திருந்தது. இதற்காக ஏப்ரல் 28 அன்று கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் சென்றிருந்தார். ஆனால், அதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தனது வீட்டிலிருந்தபோது எதேச்சையாக அரளி மலர்களை அவர் சாப்பிட வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மரணம் குறித்து விசாரணை நடத்திய கேரள காவல்துறை அரளி மலர்களை சாப்பிட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது. அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகுமரணத்துக்கான முழு காரணம்தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதையடுத்து, கேரள அரசு நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட 1,200 கோயில்களிலும் மற்றும் மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட 1,300 கோயில்களிலும் அரளி பூக்களை இனி பிரசாதமாக வழங்கிட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த்கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளிப் பூக்களைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குமாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லிபூ, ரோசாப்பூக்களை நைவேத்தியம் மற்றும் பிரசாதத்துக்குவழங்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது. கோயில் பூஜைகளில்அரளிப்பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர்த்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட மாட்டாது. எங்கள் வாரியத்துக்கு உட்பட்ட அனைத்து உதவி ஆணையர்களுக்கும் இந்த முடிவு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அரளிப்பூ தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x