Published : 10 Apr 2018 04:02 PM
Last Updated : 10 Apr 2018 04:02 PM
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆல்வார் நகர அரசுப்பள்ளியில் மாணவர்களைக் கவரும் வகையில் வகுப்பறைகளை ரயில், இஞ்சின், ரயில்பெட்டிகள் போன்று மாற்றி வண்ணம் பூசப்பட்டுள்ளதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளி செல்கின்றனர்.
ஆல்வார் நகரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் என்ற கடந்த மாதம் வரை அழைக்கப்பட்டாலும், இப்போது அனைவரும், ரயில்வே பள்ளிக்கூடம் என்று அழைக்கிறார்கள். ரயில்பெட்டிகள் போன்று வரையப்பட்டு இருக்கும் வகுப்புகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருகிறார்கள். வகுப்பறைகளையும், பள்ளிக்கூடத்தையும் ரயில்நிலையம் போல மாற்றி, அதற்குரிய படங்களையும், வண்ணங்களையும் தீட்டியதே மாணவர்கள் சீரிய வருகைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
வகுப்பறைகள் ரயில்பெட்டிகளைப் போலவும், பள்ளியின் முகப்பு ரயில்எஞ்சின் போலவும், வகுப்பறை வராண்டா (நடைபாதை) ரயில் நிலை நடைமேடை போன்று மாற்றப்பட்டுள்ளது மாணவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவரி ஜாசி கவுர் கூறுகையில், ‘இப்போது எங்கள் வகுப்பில் ரயில்படம் வரையும் பணி நடந்துவருகிறது. ஆதலால், நீண்டநேரம் அங்கு இருக்கமுடியாது. ஆனால், மே 1-ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுபிறப்பதால், ரயில்பெட்டி வகுப்புக்கு செல்ல ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளியின் முதல்வர் புருஷோத்தம் குப்தா கூறியதாவது:
ஆல்வார் அரசுப்பள்ளிக்கூடம் என்ற பெயர் மாறி, இப்போது, ரயில்நிலைய பள்ளிக்கூடம் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பெயர் பதிந்துவிட்டது. ஆல்வார் மாவட்டத்தின் சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் பொறியாளர் ஒருவரின் சிந்தனையில் இந்த பள்ளிக்கூடத்தை ரயில்நிலையம் போல் மாற்றியுள்ளோம்.
ஏற்கனவே இதேபோன்று கேரள மாநிலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ரயில்நிலைய படம் வரையப்பட்டு இருந்தது அதைப்பார்த்து இங்கு வரைந்துள்ளோம். ரயில்பெட்டிகளைப் போன்று படம் வரைந்தபின் மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
மாவட்ட சர்வசிக்சான் அபியான் இளநிலை பொறியாளர் ராஜேஷ் லாவண்யா கூறியதாவது:
கேரள மாநிலத்தில் இதேபோன்று ஒரு பள்ளியில் ரயில்நிலைய படம் வரையப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து நாங்களும் வரைந்துள்ளோம். ஏற்கனவே 5 வகுப்பறைகளில் ரயில்பெட்டிகள் படம் வரையப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் மற்ற வகுப்பறைகளில் ஜெய்ப்பூர்-டெல்லி டபுள்டக்கர் ரயிலின் படம், அஜ்மீர்-டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் படம் ஆகியவற்றை வரைய இருக்கிறோம். பள்ளிச்சுவற்றில் சரக்கு ரயிலின் படங்கள், ரயில்பெட்டிகள், மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் அதிகமான மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்கூடம் வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT