Published : 10 May 2024 07:51 PM
Last Updated : 10 May 2024 07:51 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இறுதி வாக்குப்பதிவு சதவீத முரண்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான முடிவை உருவாக்கும் முயற்சி இது” என்று சாடியுள்ளது.
இது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இணைப்புகளுடன் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தில், தேர்தல் வாக்குப்பதிவுகளை வெளியிடுவதில் தாமதமும், முரண்பாடுகளும் உள்ளது என்ற மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், “எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து, விரும்பத்தகாதது, ஆதாரமற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாரபட்சமான தகவல்களை உருவாக்கும் முயற்சி” என்று காட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், ‘தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பொதுவெளியில் வைக்கப்பட்ட கார்கேவின் கடிதம் மிகவும் விரும்பத்தகாத ஒன்று. சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடந்துகொண்டிருக்கும் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்துதல், தவறாக வழிநடத்துதல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைகள் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள், தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் வகையில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உள்ளத்தில் சந்தேகத்தை விதைக்கும் வண்ணமாக உள்ளது. நீங்கள் கூறியிருப்பது இறுதி முடிவில் தாக்கம் செலுத்தும் முயற்சியா? அப்படியான உள்நோக்கம் உங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கார்கே கடிதம் விவரம்: இண்டியா கூட்டணியின் தலைவர்களுக்கு கார்கே எழுதிய கடிதத்தில், “கடந்த 52 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களை பார்த்து வருகிறேன். தற்போதைய மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பொதுவாக தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? இதுகுறித்து தேர்தல் ஆணையம் எவ்வித விளக்கமும் அளிக்காதது ஏன்? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் முதல்கட்ட தேர்தலில் 60% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்தஏப்ரல் 20-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் முதல்கட்ட தேர்தலில் 65.5 %வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் கடந்தஏப்ரல் 27-ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தில், 66.7% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், முதல்கட்ட தேர்தலில் 66.14%, இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டதேர்தலில் 5.5 சதவீதம் அளவுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 5.74 சதவீதம் அளவுக்கும் வாக்குப் பதிவு சதவீதம் திடீரென உயர்ந்திருக்கிறது.
மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் எவ்வளவு வாக்குப் பதிவு சதவீதம் பதிவானது என்பது குறித்த முக்கியமான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இந்த விவரங்களை அளித்தால் மட்டுமே கூடுதலாக பதிவான வாக்குகள் எந்த தொகுதிகளை சேர்ந்தவை? குறிப்பிட்ட ஒரு தொகுதியில் மட்டும் வாக்குகள் கூடியிருக்கிறதா? கடந்த 2019-ல் பாஜக குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த கட்ட தேர்தல்களில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பதுஉள்ளிட்ட முக்கிய விவரங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்தால், தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் செய்ய முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது” என்று அந்தக் கடிதத்தில் கார்கே கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT