Published : 10 May 2024 03:26 PM
Last Updated : 10 May 2024 03:26 PM
கன்னவுஜ்: மக்களவைத் தேர்தலையொட்டி, தன்னைக் காப்பாற்றும்படி அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னவுஜில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் உரை நிகழ்த்தியுள்ள பிரதமர் மோடி ஒருமுறை கூட அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டுப் பேசியது இல்லை. யாராவது பயம்கொள்ளும்போது அவர்களைக் காப்பாற்றக் கூடிய நபர்களின் பெயர்களை நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் பிரதமர் மோடி இப்போது தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துள்ளார்.
‘இண்டியா கூட்டணி என்னை கார்னர் செய்துவிட்டது. நான் தோற்கப் போகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அம்பானி, அதானியிடம் தற்போது மோடி மன்றாடி வருகிறார். அதானி எவ்வாறு டெம்போவில் பணம் அனுப்பினார் என்பது மோடிக்குத் தெரியும். அது குறித்து அவருக்கு தனிப்பட்ட அனுபவம் இருக்கும்.
இப்போது பாஜக, நரேந்திர மோடி, அமித் ஷா முதலானோர் உங்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கலாம், அடுத்த 10 - 15 நாட்களுக்கு அவர்கள் உங்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாம். தடுமாறி விடாதீர்கள். இந்த பொதுத் தேர்தலில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அதிலிருந்துதான் எல்லாம் எழுகின்றன. அதுதான் அரசியல் சாசனம்.
நரேந்திர மோடி 22 பேருக்காகத்தான் வேலை செய்துள்ளார். அந்த 22 பேரிடம் இந்தியாவில் உள்ள 70 கோடி பேரிடம் இருக்கும் சொத்துகளுக்கு நிகரான சொத்துகள் இருக்கிறது. அவர்களால் (பிரதமர் மோடி) 22 கோடீஸ்வர்களை உருவாக்க முடியும் என்றால், இண்டியா கூட்டணி கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது" என்று ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் இந்த வார தொடக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்?
நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன்” என்று பேசினார். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மேடையிலும் அதானி, அம்பானியை குறிப்பிட்டு பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...