Last Updated : 10 May, 2024 09:56 AM

17  

Published : 10 May 2024 09:56 AM
Last Updated : 10 May 2024 09:56 AM

தேர்தல் விவாதத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, ராகுலுக்கு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின்போது இதுவரை இல்லாத வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனுமானங்களின் பேரில் பல புகார்களை முன்வைத்துள்ளனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார். இந்தவகையில் தொடரும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இவை உண்மையிலேயே சாத்தியமா? என்பதை அறியும் வகையிலும், பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதம் செய்ய இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், மூத்த பத்திரிகையாளரும் `தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகிய மூவரும் கையொப்பம் இட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதமானது, நேற்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வசிக்கும் அரசு குடியிருப்பில் பெறப்பட்டுள்ளது. இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், இந்திய பிரஜைகள் எனும் வகையில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மூவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துகளின் மறுபங்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் பதில் நடவடிக்கை ஆகியவை மீது பிரதமர் மோடியிடம் பதில்களை கேட்டதுடன் அவரை பொது விவாதத்துக்கும் அழைத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள இருவராலும் முடியாவிட்டால் அவர்கள் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும்படியும் மூவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகலை தனது எக்ஸ் தளத்திலும், பத்திரிகையாளர் என்.ராம் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவும் வைரலாக தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x