Published : 10 May 2024 07:21 AM
Last Updated : 10 May 2024 07:21 AM

சந்தேஷ்காலியில் பாலியல் புகாரை வாபஸ் பெற்ற பெண்: வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு

கொல்கத்தா: சந்தேஷ்காலியில் மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் புகார் கொடுத்ததாகவும், தற்போது அந்த பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்றதாகவும் பெண் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் அங்குள்ள பெண்களின் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் பெண்கள் புகார் கொடுத்தனர். இந்தவிவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை புகார் தொடுத்த பெண் ஒருவர், போலீஸ் நிலையத்தை அணுகி தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கூறியதாவது: எங்களை மிரட்டி அந்த புகாரைத் தருமாறு சிலர் கூறினர். தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகளின் உத்தரவின் பேரில் புகாரை நாங்கள் கொடுத்தோம். எங்களை ஒரு வெள்ளைத் தாளில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தினர். அந்த வெள்ளைத்தாளில் என்ன எழுதியிருந்தது என்று கூட எனக்குத் தெரியவில்லை.

பாஜக மஹிளா மோர்ச்சா நிர்வாகிகள் என்னை மிரட்டி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போலியாக பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்க வற்புறுத்தினர். அவர்கள் கொடுத்த புகார் அனைத்துமே போலியானவை. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்காக என்று முதலில் கூறி என்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிய பாஜகவினர், பின்னர் அதனை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனக்கு எவ்வித பாலியல் வன்கொடுமையும் நடக்கவில்லை.

என்னையும், எனது மாமியாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகாரைக் கொடுக்க வைத்தனர். தற்போது என்னுடைய இந்த முடிவால் பாஜகவினரிடம் இருந்து எனக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது . ஆகவே எனக்கு பாதுகாப்பு கோரி தனியாக ஒரு கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த புலனாய்வுக்குப் பின்னர், பாஜகவை சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவர் சந்தேஷ்காலி விவகாரமானது தங்கள் கட்சியின் நாடக நடவடிக்கை என்று பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சந்தேஷ்காலி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x