அரசியல் ரீதியான வாதங்களுக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல், பொது விநியோக திட்ட ஊழல், சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சிபிஐ, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த சூழலில் இரு புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறைக்கான பொதுவான முன்அனுமதியை மேற்கு
வங்க அரசு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வாபஸ் பெற்றது. இதன்படி மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கு வங்கத்தில் அனுமதியின்றி விசாரணை நடத்த முடியாது. ஆனால் சிபிஐ, அமலாக்கத் துறை வரம்புகளை மீறி செயல்படுகின்றன’’ என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “சிபிஐ, அமலாக்கத் துறை சுதந்திரமான அமைப்புகள். சிபிஐ என்பது மத்திய அரசின் காவல் துறை என்று கூறுவதை ஏற்க முடியாது. சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் தங்கள் கடமையை செய்கின்றன" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறும்போது, “வழக்கு விசாரணையின்போது அரசியல் ரீதியான வாதங்களை முன்வைக்கக்கூடாது. அரசியல் வாதங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை மத்திய அரசு, மேற்குவங்க அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தனர்.
