Published : 26 Apr 2018 03:23 PM
Last Updated : 26 Apr 2018 03:23 PM
காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நீதி பரிபாலன முறையில் சிறுநேர்மை தவறுவதாகக் கருதினாலும் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது
காஷ்மீரில் கடந்த ஜனவரி 10-ம் தேதி கதுவா மாவட்டத்தில் 8 வயது முஸ்லிம் பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பின் 17-ம் தேதி சடலமாக அப்பகுதியில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த சிறுமியின் பலாத்கார விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சி ராம், விஷால் மல்ஹோத்ரா ஆகிய இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தாங்கள் தவறாக இந்த வழக்கில் இணைக்கப்பட்டுவிட்டோம். நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட சிபிஐ வசம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை செய்யக்கூடாது, இந்த வழக்கை அருகில் உள்ள சண்டிகர் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இங்கு நேர்மையாக விசாரணை நடக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்காக ஆஜராகி வரும் பெண் வழக்கறிஞர் மீதே சக வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரிவித்தி ருந்தார்.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.எம்.சந்திரசூட் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்க நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
காஷ்மீரில் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி போராட்டம் நடத்தி வருவது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் மூடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அப்போது தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா கூறுகையில், ''இந்த வழக்கு விசாரணையின் முக்கிய கவலையே நேர்மையாக நடக்குமா என்பதுதான். ஒருவேளை நேர்மையாக விசாரணை நடந்து வந்தாலும் அதைத் திசை திருப்பவும் இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவருக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது.
ஒருவேளை நீதிபரிபாலன முறையில் சிறுநேர்மை தவறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நினைத்து எங்களை அணுகினாலும் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
அப்போது காஷ்மீர் வழக்கறிஞர்கள் சார்பில் பார்கவுன்சில் இந்தியா வழக்கறிஞர் கூறுகையில், ''காஷ்மீரில் ஒருபோதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு செய்யவில்லை. ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. கிரைம் பிராஞ்ச் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ விசாரணை கேட்டுதான் கோரிக்கை விடுத்தனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT