Published : 12 Apr 2018 08:34 AM
Last Updated : 12 Apr 2018 08:34 AM

மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி உண்ணாவிரத நாடகம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

மக்களவை முடங்கியதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். ஆனால், இதனை திசை திருப்பவே பிரதமர் உட்பட பாஜகவினர் உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

அமராவதியில் கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி (இன்று) வரை ‘மகிழ்ச்சியான நகரங்களின் கருத்தரங்கு’ என்ற நிகழ்வு நடைபெறுகிறது. இதில் நேற்று பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, நிதியுதவி அளிக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் நாடாளுமன்றம் முடங்கியதைக் கண்டித்து, 12-ம் தேதி (இன்று) பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உட்பட பாஜகவினர் தங்களது பணிகளை செய்தவாறே ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இது நாட்டு மக்களை திசை திருப்பும் ஒரு நாடகமாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியதற்கு யார் காரணம்? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள பயந்த பாஜகதான் இதற்கு முழு காரணம். மக்களவை முடங்கியதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதிமுக எம்பிக்களை அமளியில் ஈடுபட வைத்து தன்னை தற்காத்து கொண்டது பாஜக என்பது நாடறிந்த உண்மை.

மத்திய அரசு மனது வைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென கூறியுள்ளது. இதனை அமல்படுத்தக் கூடாது என மோடியை யார் தடுத்து நிறுத்தியது? தவறை தன் மீது வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சியினர் மீது பழி போடுவது நியாயம் இல்லை. தனியார் அமைப்புகளின் உதவியோடு அமராவதி நகரம் உருவாகும். மற்ற கட்சிகளின் உதவியோடு தெலுங்கு தேசத்தை அசைத்து பார்க்கலாம் என மத்திய அரசு காணும் கனவு பலிக்காது. தெலுங்கு தேசம் கட்சி மிக பலமாக உள்ளது.

இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x