Published : 09 May 2024 07:54 PM
Last Updated : 09 May 2024 07:54 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தையும் அதன் மக்களின் பெயரையும் கெடுக்க பாஜக சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “மேற்கு வங்க மக்கள் பொய் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மாநிலத்தின் 10 கோடி மக்களை அவமானப்படுத்தியதற்காக பாஜகவை அவர் கண்டித்தார்.
பிர்பும் மக்களவைத் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சதாப்தி ராயை ஆதரித்து காணொளி வாயிலாக அபிஷேக் பானர்ஜி பிரச்சாரம் செய்தார். அப்போது சந்தேஷ்காலி வீடியோகள் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், "கடந்த வாரத்தின் நிகழ்வுகள் மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் அவமானத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்த சதி செய்தவர்களின் உண்மை நோக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.
பாஜகவின் உண்மையான முகத்தை தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள். கடந்த மூன்று மாதங்களாக சந்தேஷ்காலி குறித்து பொய்யான கதைகளை உருவாக்கி மாநில மக்களை அவர்கள் சிறுமைப்படுத்தி வந்தனர். நமது கட்சிக்கும் அதன் உள்ளூர் தலைவர்களுக்கும் எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்க வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ரூ.2,000 கொடுத்து அவர்களை அவமதித்தனர். இதற்கெல்லாம் மேற்கு வங்க மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பார்கள்.
மாநிலத்தில் உள்ள 100 நாள் வேலைக்கான ஊதியத்தை மூன்று ஆண்டுகளாக பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது அக்கட்சியின் மேற்கு வங்க விரோத போக்கைக் காட்டுகிறது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தான் தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்துக்காக இங்கு வந்திருந்தார் அவருடைய மாநிலத்தில் தலித்துகள், பிற சாதிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து அவரிடம் கேட்க விரும்பினேன். மேற்கு வங்கத்தில் பாஜகவின் தவறான ஆட்சி மற்றும் அதன் பிரிவினைவாத கொள்கைகளை எதிர்க்கும் ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ் மட்டும்தான். மோடிக்கு எதிரான வாக்களார்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்" என்று அபிஷேக் பானர்ஜி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment