Published : 09 May 2024 07:47 PM
Last Updated : 09 May 2024 07:47 PM
புதுடெல்லி: பிரதமர் மோடியை அமைச்சர் ஒருவர் அவதூறாகப் பேசியது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள மூசா ஜமீர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இது ஒரு நல்ல பயணம். நானும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கரும் மிகவும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். இந்திய அரசாங்கத்திற்கும், வெளியுறவுத் துறைக்கும் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
மாலத்தீவுகள் சுதந்திரமடைந்தபோது, அதனை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இத்தனை ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையேயான பலனளிக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் மக்கள் தொடர்பை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது இருவருக்குமே நன்மை பயக்கும். மாலத்தீவு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நலனுக்காக எங்கள் உறவை ஆழப்படுத்தவும், மேலும் மேலும் முன்னேறவும் நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் மாலத்தீவு அமைச்சர் ஒருவர் பேசியது குறித்து கேட்கிறீர்கள். அது அரசின் நிலைப்பாடு அல்ல என்று நாங்கள் கூறி இருக்கிறோம். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இது மீண்டும் நடக்காமல் இருக்க சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை மாலத்தீவு மற்றும் இந்திய அரசாங்கங்கள் புரிந்து கொண்டன.
மாலத்தீவில் பணியாற்றி வந்த இந்திய ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டது மற்றும் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, இரு நாட்டு பாதுகாப்பு உறவு ராணுவ வீரர்களுக்கு அப்பாற்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியை மாலத்தீவு ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்த பயிற்சிகளை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். மாலத்தீவுகளுக்கு இந்தியப் பெருங்கடலின் அமைதியும் பாதுகாப்பும் முக்கியம். இந்தியாவைப் போலவே, இந்தியப் பெருங்கடலை அமைதியான இடமாக மாற்ற நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருவது குறைந்து வருவது குறித்து கேட்கிறீர்கள். மாலத்தீவுக்குச் செல்ல விரும்பும் அனைத்து இந்தியர்களையும் வரவேற்க விரும்புவதாக எங்கள் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க நானும் விருப்பமாக இருக்கிறேன். கடந்த எட்டு மாத காலம் என்பது, மாலத்தீவுகள் மற்றும் இந்தியாவில் தேர்தல் சுழற்சி காலமாக உள்ளது.
எனவே, இந்த கால கட்டத்தை விரைவில் தாண்டிச் செல்வோம். அனைத்து இந்திய சுற்றுலாப் பயணிகளும் தொடர்ந்து வருவார்கள். கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16% முதல் 17% வரை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அது அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தியப் பெருங்கடலின் அமைதியும் பாதுகாப்பும் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் முக்கியம். நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். மாலத்தீவு துறைமுகத்தில் சீன கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது நட்பு ரீதியிலானது. மாலத்தீவில் இது மிகவும் வழக்கமானது. நாங்கள் அமைதியை விரும்பும் நாடு என்ற வகையில், அமைதி நோக்கத்திற்கானது என்பதால் அந்த கப்பல் வருவதை நாங்கள் வரவேற்றோம். அதேநேரத்தில், அந்த கப்பல், மாலத்தீவு கடற்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக வரவில்லை. மாலத்தீவு கடல் நீரை ஆராய்ச்சி செய்வதற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு, மாலத்தீவு பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இந்திய அரசிடம் இருந்து நாங்கள் பெற்ற கடன் மற்றும் மானியங்களால் மாலத்தீவு மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் இந்தியாவை பாராட்டுகிறோம்.
மாலத்தீவு அதிபர் மொகம்மது மொய்சு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றது குறித்து கேட்கிறீர்கள். சீனாவுடன் மாலத்தீவுக்கு ராணுவ ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எந்த வெளிநாட்டு இராணுவத்தையும் நாங்கள் மாலத்தீவுக்குக் கொண்டு வரவில்லை என்று அதிபர் மொகம்மது மொய்சு தெளிவாக கூறியுள்ளார். எங்கள் அதிபர், சீனாவுக்கு சென்றதைப் போலவே துருக்கி சென்றார்.
முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருவது குறித்து நாங்கள் இந்தியாவுடன் விவாதித்தோம். பின்னர், இருதரப்பு வசதிக்காக, அந்த பயணத்தை கொஞ்சம் தாமதப்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். உண்மையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான இன்றைய சந்திப்பின்போதுகூட, அதிபர் மொகம்மது மொய்வு விரைவாக இந்திய பயணம் மேற்கொள்வது குறித்து விவாதித்தோம். அது நடக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT