Published : 09 May 2024 05:55 PM
Last Updated : 09 May 2024 05:55 PM
போங்கிர்(தெலங்கானா): பாஜக வெற்றி பெற்றால் தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவின் போங்கிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "பொய்களைக் கூறி காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் அவர் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார் என காங்கிரஸ் கூறுகிறது. பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி நாட்டை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். ஆனால், அவர் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியோ எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை அளித்துள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது தெலங்கானா பாஜகவுக்கு 4 எம்பிக்களை வழங்கியது. இம்முறை 10-க்கும் மேற்பட்ட எம்பிக்களை வழங்க வேண்டும். அப்போதுதான், 400 தொகுதிகளுக்கும் மேலான வெற்றியைப் பெற முடியும். எனவே, பாஜக 10-க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி-க்களுக்கான இடஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துகிறோம்.
மோடியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். ஆனால், தான் அளிக்கும் வாக்குறுதிகள் மீது சூரியன் மறையும் வரை கூட ராகுல் காந்தி உறுதியாக இருக்க மாட்டார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது பேசிய ராகுல் காந்தி, மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை எவ்வித அடமானமும் இன்றி வழங்கப்படும். பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும் சர்வதேச பள்ளிகள் திறக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை 70 ஆண்டுகளாக தடுத்து வந்த கட்சி காங்கிரஸ். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் வழக்கில் வெற்றி பெற்று, கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை முதல் பிராண பிரதிஷ்டை வரை அனைத்தையும் மோடி முடித்துவிட்டார். அதேபோல், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, தற்போது அந்த மாநிலத்தில் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்க வழி வகுத்துள்ளார்.
காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள், சிறுபான்மையினரை தாஜா செய்யக்கூடிய முக்கோண கட்சிகள். இவர்கள்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தார்கள். குரானின் அடிப்படையில் தெலங்கானாவை ஆட்சி செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். முத்தலாக்கை திரும்பக் கொண்டு வர அவர்கள் விரும்புகிறார்கள். அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையும் அவர்கள் புறக்கணித்தார்கள்" என்று அமித் ஷா பேசினார்.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT