Published : 09 May 2024 08:38 AM
Last Updated : 09 May 2024 08:38 AM
ரேபரேலி: தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதானி, அம்பானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்று நேற்று பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
“ராகுல் காந்தி தினமும் அதானியின் உண்மை முகம் குறித்து மக்களிடம் பேசிவருகிறார். மோடிக்கும் தொழில் துறையினருக்கும் இடையே உள்ள தொடர்பை ராகுல் காந்தி தினம் மக்களிடம் பகிரங்கப்படுத்தி வருகிறார்” என்று பதிலடி தந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், “முன்னதாக 5 தொழிலதிபர்கள் குறித்து ராகுல் காந்தி பேசி வந்தார். அதன் பிறகு அதானி, அம்பானியை வசைபாட ஆரம்பித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்விருவரை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.
ஒரே இரவில் அதானி - அம்பானியை வசைபாடுவதை நிறுத்த அவர்களிடமிருந்து காங்கிரஸ் எவ்வளவு கருப்புப் பணம் பெற்றது? அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் நடந்திருப்பது போல் தெரிகிறது. காங்கிரஸ் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார். “அதானி குறித்து ராகுல் காந்தி பேசவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
உண்மை என்னவென்றால், ராகுல் தினமும் அதானி குறித்த உண்மையை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார். நரேந்திர மோடிக்கும் தொழில்துறையினருக்கும் இடையிலான தொடர்பை ராகுல் தினமும் பகிரங்கப்படுத்துகிறார்.
மோடி அவரது தொழிலதிபர் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட அவர் தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு மோடி பதிலளிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT