Published : 09 May 2024 05:13 AM
Last Updated : 09 May 2024 05:13 AM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா. இவர் அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் பரம்பரை சொத்து வரி விதிக்க வேண்டும் என பேசிய வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழுக்கு சாம் பிட்ரோடா சமீபத்தில் அளித்த பேட்டியில், “உலகில் ஜனநாயகத்துக்கு ஒளிரும் முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் சீனர்களைப் போலவும் மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் வசிப்பவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளனர். இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும்” என்றார்.
இவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பிட்ரோடாவின் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், “வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான் இந்தியனைப் போல இருக்கிறேன். நம் நாடு பன்முகத்தன்மை கொண்டது. நாம் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள்தான்” என கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, “சாம் பிட்ரோடா நம் நாட்டைப்பற்றி புரிந்து கொள்ளவில்லை.இவர்தான் ராகுல் காந்தியின் ஆலோசகராக உள்ளார். ராகுல்ஏன் அர்த்தமின்றி பேசுகிறார் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.
மணிப்பூர் மாநில முதல்வர் என்.பைரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், “சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக் கது. காங்கிரஸ் கட்சி எப்போதும் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்யும். ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உணர வேண்டும். காங்கிரஸ் கட்சியும் சாம் பிட்ரோடாவும் மன்னிப்பு கோர வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். நான் இந்தியனாக தெரிகிறேன். என்னுடைய நாட்டின்வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களும் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்தியராகவே தெரிகிறார்கள். ஆனால், ராகுல் காந்தியின் ஆலோசகருக்கு (பிட்ரோடா) நாம் அனைவரும் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள் மற்றும் வெள்ளையர்களாக தெரிகிறோம். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இண்டியா கூட்டணிக்கு அவமானம்” என பதிவிட்டுள்ளார்.
பிட்ரோடா ராஜினாமா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சாம் பிட்ரோடா கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சாம் பிட்ரோடா முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...