Published : 08 May 2024 09:15 PM
Last Updated : 08 May 2024 09:15 PM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிட்ரோடாவின் முடிவை கட்சித் தலைவர் கார்கே ஏற்றுக்கொண்டதாகவும், இந்த முடிவு அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பிட்ரோடா பேசிய தோல் நிறம் குறித்த கருத்து நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் மோடியும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் யுபிஏ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசு ஆட்சி அமைத்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பிட்ரோடாவை இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக ஆக்கினார். கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பொது உள்கட்டமைப்புக்கான ஆலோசகராக இருந்தார்.
சர்ச்சைக் கருத்துகளுக்கு சாம் பிட்ரோடா புதியவர் இல்லை என்றாலும், இந்த முறை அவர் தெரிவித்திருந்த கருத்து எழுப்பிய சர்ச்சை மிகப் பெரிய அளவில் சேதத்தை எற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துகளில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியிருக்கும் காங்கிரஸ் கட்சி, அவரது கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளது.
சாம் பிட்ரோடா பேசியது என்ன? - பேட்டி ஒன்றில் 75 ஆண்டுகளாக இந்தியர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று தெரிவித்த சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சி நாட்டை வேற்றுமையிலும் ஒற்றுமையாக வைத்திருந்தது என்று தெரிவித்தார். அதுகுறித்து விரிவாகக் கூறும்போது, “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
துரதிருஷ்டவசமானது - காங்.: வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் பிட்ரோடா தெரிவித்திருக்கும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிருஷ்டவசமானது, முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக பிட்ரோடா போட்காஸ்ட் ஒன்றில் கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஒப்புமைகளில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தன்னை விலக்கிக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் அமெரிக்க மாமா சாம் - பிரதமர் தாக்கு: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கருப்பு நிறம் காரணமாகவே அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நான் இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறேன். என்னை யார் அவதூறாக பேசினாலும் நான் கோபப்படுவதில்லை. அதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ள மிகப் பெரிய அவதூறு என்னுள் கோபத்தை நிரப்பியுள்ளது.
இளவரசரின் மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அந்த மாமா அவரின் தத்துவ ஆலோசகர் மற்றும் வழிகாட்டியுமாவார். இளவரசரின் அந்த வழிகாட்டி இன்று மிகப் பெரிய ரகசியத்தை இன்று உடைத்துள்ளார். கருமையான நிறம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்" என்று பிரதமர் மோடி தாக்கியுள்ளார்.
பரம்பரைச் சொத்து வரி சர்ச்சை: முன்னதாக, கடந்த மாதம் சாம் பிட்ரோடாவின் வீடியோ பேச்சு ஒன்று சர்ச்சையானது. அதில் அவர், “அமெரிக்காவில் பாரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. உதாரணமாக ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்பிலான சொத்துஇருந்தால், அவர் உயிரிழக்கும்போது 55% சொத்தை அரசு எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள 45% சொத்துகளை மட்டுமே அவருடைய வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இது ஒரு நல்ல சட்டம். இது எனக்கு நியாயமாக தெரிகிறது.
ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இது குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்” என பேசியிருந்தார். இவரது இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தோல் நிறம் குறித்த பேச்சு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT