Published : 08 May 2024 03:09 AM
Last Updated : 08 May 2024 03:09 AM
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி. கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் மாயாவதி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, மாயாவதியை விடவும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம். லண்டனில் எம்பிஏ படித்த ஆகாஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் நவீன முகமாகவே அறியப்படுகிறார். ஊடகங்களையும் திறம்படக் கையாள்கிறார். அவரது பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் கூட்டம் சேர்கிறது.
நிலைமை இப்படி இருக்க, நேற்று ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மாயாவதி, அவர் ‘அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.
"ஆனால் கட்சி மற்றும் இயக்கத்தின் பெரிய நலன் கருதி, ஆகாஷ் ஆனந்த் முழு முதிர்ச்சி அடையும் வரை இந்த இரண்டு முக்கியப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்" என்று அந்த அறிவிப்பில் மாயாவதி தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தனது சகோதரரும் ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமார் முன்பு போலவே தனது பொறுப்புகளை நிறைவேற்றுவார் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார். என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை. எனினும் மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.
பாஜகவை விமர்சித்த ஆகாஷ் ஆனந்த்: கடந்த மாத இறுதியில், சீதாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. தனது இளைஞர்களை பசியுடன் விட்டுவிட்டு, தனது முதியவர்களை அடிமைப்படுத்தும் ஒரு பயங்கரவாத அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பாஜக அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பாஜக அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் 16,000 கோடி ரூபாய் எடுத்த திருடர்களின் கட்சி பாஜக." என்று கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...