Published : 07 May 2024 08:19 PM
Last Updated : 07 May 2024 08:19 PM
புதுடெல்லி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த பேச்சு, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் என்பதை தெளிவாக்கியுள்ளது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உள்ளிட்ட பிஹார் மேலவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவிடம், அரசியல் சாசனத்தை மீறி இண்டியா கூட்டணி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பார்க்கிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “முஸ்லிம்கள் முழுமையாக இடஒதுக்கீடு பெற வேண்டும்” என்று லாலு பதிலளித்தார்.
மேலும், “அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பும் பாஜக தலைமையிலான ஆட்சி, இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள் என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் (பாஜக) அரசியல் சாசனத்தை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இது நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது” என்றார்.
மோடி சாடல்: லாலு பிரசாத்தின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர், "மாட்டுத் தீவன ஊழலில் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளி்யே உள்ள இண்டியா கூட்டணியின் முக்கிய கூட்டாளியான ஒருவர், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார். அதுமட்டுமில்ல... முஸ்லிம்களுக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டு்ம் என்று பேசியுள்ளார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை அவர்கள் (இண்டியா கூட்டணி) பறிக்க நினைக்கிறார்கள் என்பதே இதற்கு அர்த்தம்" என்று குற்றம்சாட்டினார்.
பாஜக குற்றச்சாட்டு: இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், "அனைத்து இடஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் ‘பூரா கா பூரா’என்று அவர் தெரிவித்திருப்பது மிகவும் தீவிரமானது. இதன் மூலம் அவர்கள் (இண்டியா கூட்டணி) எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினரிடமிருந்து இடஒதுக்கீட்டை பங்கிட்டு முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புவது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் அமைப்பை மாற்றுவதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் பங்கினை பிரித்து முஸ்லிம்களுக்கு வழங்க இண்டியா கூட்டணி முயல்கிறது என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டு இப்போது லாலு பிரசாத் யாதவின் பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது.
மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு முஸ்லிம்கள் முதன்மையானவர்கள், யாதவர்கள் இரண்டாம் பட்சமானவர்கள் என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட முடியாது என்று அரசியல் சாசனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அரசியல் அமைப்பின் அடிப்படைகளை மாற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வாக்குகளுக்காக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT