Published : 07 May 2024 09:54 AM
Last Updated : 07 May 2024 09:54 AM
லக்னோ: உ.பி.யில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணிக்கும் (என்டிஏ) இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இண்டியா கூட்டணியில் சமாஜ்வாதி 62, காங்கிரஸ் 17 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி இந்தமுறை இண்டியா கூட்டணியின் உறுப்பினராகி விட்டதால் உ.பி.யில் போட்டியிடவில்லை. மாறாக அக்கட்சி சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளது.
டெல்லியில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் உ.பி.யிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், வாராணசியில் என்டிஏவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். இதன் முடிவில் பாஜகவின் மோடிக்கு 5,81,022 (56.37%) வாக்குகள் கிடைத்தன. அடுத்து வந்த கேஜ்ரிவால் 2,09,238 (20.30%) வாக்குகளை பெற்றார். உ.பி.யின் பிற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆம் ஆத்மி டெபாசிட் தொகையையும் இழக்க நேரிட்டது.
இதேபோன்ற நிலை ஆம் ஆத்மிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, அக்கட்சி 2019 தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் போட்டியிடவில்லை. எனினும், 2022 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆம் ஆத்மி 380 தொகுதிகளில் போட்டியிட்டது. இதிலும் அக்கட்சி எந்த தொகுதியையும் பெறவில்லை. பல தொகுதிகளில் டெபாசிட் தொகையையும் இழந்தது.
தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இண்டியா கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், கூட்டணியின் சக உறுப்பினர்களுக்காக ஆம் ஆத்மி கட்சி உ.பி.யில்பிரச்சாரம் செய்ய உள்ளது கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய்சிங் தலைமையில் முக்கியத் தலைவர்கள் சிலர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT