Published : 07 May 2024 06:11 AM
Last Updated : 07 May 2024 06:11 AM
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவர்களிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
பிஹார் மாநிலத்தில் ஒரு தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுபோல ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாட்னா நகரின் சாஸ்திரி நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அசல் விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக நீட் தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆள்மாறாட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியது தெரிய வந்துள்ளது.
எம்பிபிஎஸ் மாணவர்: குறிப்பாக பாட்னா நகரின் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் வேறு ஒருவருக்காக நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய பெயர் சோனு சிங் என்பதும் பிரபலமான மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இவர் அபிஷேக் ராஜ் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். இதுபோல் ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.5 லட்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பலர் இதுபோன்று வேறு நபர்களுக்காக நீட் தேர்வை எழுதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான நபர்களிடம் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குறிப்பாக வினாத்தாள் கசிந்ததா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வினாத்தாள் கசியவில்லை: இதுகுறித்து நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியின் இயக்குநர் டாக்டர்சாதனா பராஷர் நேற்று கூறும்போது, “நீட் (யுஜி) வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை. வினாத்தாள் கசிவதைத் தடுக்ககடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT