Published : 06 May 2024 05:56 PM
Last Updated : 06 May 2024 05:56 PM
பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் உறுப்பினரும், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியின் உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் தயக்கமின்றி புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது எஸ்ஐடி.
பல்வேறு பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின. இதையடுத்து அவர் மீது பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளித்தனர். இது அரசியல் ரீதியாக கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. ஏனெனில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சார்பில் மீண்டும் அதே தொகுதியில் பிரஜ்வல் போட்டியிட்டார். கடந்த மாதம் அந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின.
அதோடு கர்நாடக மகளிர் ஆணையத்துக்கு அவர் இடம்பெற்றுள்ள 300 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கிடைத்தது. அதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. இக்குழுவின் முன்பு ஆஜராக பிரஜ்வல் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதே நேரத்தில் அவர் வெளிநாடு தப்பிய செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டை அடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவரது தந்தை ரேவண்ணாவை அண்மையில் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பிரஜ்வலின் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக ‘6360938947’ என்ற ஹெல்ப்லலைன் எண்ணை எஸ்ஐடி வெளியிட்டது. இதனை எஸ்ஐடி தலைவரும், காவல் துறை கூடுதல் டிஜிபி-யுமான பி.கே.சிங் அறிவித்தார். “பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க எஸ்ஐடி அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ‘6360938947’ என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிக்கலாம். தனிப்பட்ட முறையில் எங்கள் குழுவினர் அவர்களை அணுகி உரிய நீதி கிடைக்க உறுதி அளிப்பார்கள்.
மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் இடம்பெற்றிருக்கும் வீடியோக்களை சமூக வலைதளம் அல்லது தனிப்பட்ட முறையில் மெசஞ்சரில் யாரும் பகிர வேண்டாம். அப்படி செய்பவர்களை எளிதில் அடையாளம் கண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்களை புண்படுத்தும்” என பி.கே.சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT