Published : 19 Apr 2018 05:48 PM
Last Updated : 19 Apr 2018 05:48 PM
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை, குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை எனவும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப்போகின்றன எனவும், அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 15-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில், வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பெலகாவி பகுதியின் பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல், தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், “நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு இந்து. இது இந்து தேசம். நாம் ராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை, குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப்போகின்றன. ராமர் கோயிலுக்கும் பாபர் மசூதிக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன” என பேசியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாஜக எம்எல்ஏவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக எம்எல்ஏ சஞ்சய் பட்டீல் எப்போது, எங்கே பேசினார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT