Published : 05 May 2024 05:55 PM
Last Updated : 05 May 2024 05:55 PM
புதுடெல்லி: தான் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்றும், காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை என்றும் அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கே.எல். சர்மா அளித்த பேட்டியில், "இந்த முடிவு கட்சியின் உயர் மட்டத்தால் எடுக்கப்பட்டது. இந்த தொகுதியின் வேட்பாளராக யாரும் முன்பு அறிவிக்கப்படவில்லை. என்றாலும் ஸ்மிருதி இரானியை நான் நிச்சயம் தோற்கடிப்பேன் என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றயை எனது மிகப்பெரிய அறிவிப்பு இது. நான் இங்கு காந்தி குடும்பத்தின் பணியாளின் இல்லை. நான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, பல ஆண்டுகளாக அப்படிதான் இருக்கிறேன். கடந்த 1983ல் இளைஞர் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் இங்கு வந்தேன். நான் காங்கிரஸ் கட்சியிடம் சம்பளம் பெறவில்லை. நானொரு அரசியல்வாதி.
கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று மக்கள் அவர்களிடம் (பாஜக) கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கு பதில் அளிக்காமல் மங்கள்சூத்திரா குறித்து பேசி மக்களைத் திசைத் திருப்புகிறார்கள். 2014ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
காந்தி குடும்பத்தின் விசுவாசியாக கிஷோரி லால் சர்மா கருதப்படுகிறார். காந்திகள் இல்லாத போது அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை இவர் நிர்வகித்து வந்தார்.
உத்திரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ஆச்சரிய முடிவாக அமேதியில், கே.எல் சர்மா போட்டியிடுவதாகவும், ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பாஜகவின் பியூன் கருத்து: ரேபரேலியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங், ஸ்மிருதி இரானியை எதிர்த்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி அதன் பியூனை அனுப்பியுள்ளது என்று தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், "அமேதி மற்றும் ரேபரேலியில் ராகுல் காந்தி உண்மையிலேயே வெற்றி பெற விரும்புகிறாரா? அப்படி விரும்பினால் அமேதி மக்களவைத் தொகுதியின் வாய்ப்பை அவர் ஏன் அவர்களது பியூனுக்கு கொடுத்தார். அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தி அமேதியில் இருந்து ஓடிவிட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT