Published : 05 May 2024 02:17 PM
Last Updated : 05 May 2024 02:17 PM
பெலகவி (கர்நாடகா): கர்நாடாகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் பெலகவியில், துணை முதல்வர் டிகே சிவகுமார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலாவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப். 26ம் தேதி நடந்து முடிந்த முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, காங்கிரஸ் கட்சி 8 - 9 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து வந்த தகவலின் படி, காங்கிரஸ் கட்சி 10-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெறும். ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாங்கள் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். எந்த இடைத்தரகரும் இல்லாமல், பயன்கள் அனைத்தும் என் மூலமும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மூலமும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் சென்று சேர்கிறது.
கடந்த எட்டு மாதங்களாக நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். மே 20ம் தேதி காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது. சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போதே, எடியூரப்பா அரசால் 7 கிலோவில் இருந்து 5 கிலோவாக குறைக்கப்பட்டு வழங்கப்பட்ட அரிசியின் அளவினை 10 கிலோவாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பபட்டன. அதனை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதிகளை தொடர்ந்து நிலை நிறுத்தும். பாஜக தலைவர்கள் வம்புக்காக காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறுத்தப்படும் என்று கூறிவருகிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறிவருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்றால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றுவார்கள். 400 இடங்களில் வெற்றி பெறும் வரை அமைதி காக்குமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் கூறுகிறார். பாஜகவுக்கு ஒருபோதும் அரசியல் அமைப்பின் மீது மரியாதை இருந்தது இல்லை. அதனால் தான் நாங்கள் இந்த மக்களவைத் தேர்தலை இரண்டாவது சுதந்திர போர் என்று கூறுகிறோம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதால், அவநம்பிக்கையடைந்து உச்சநீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் அவர்களை சாடிய பின்பு, ரூ. 3,600+ கோடி அறிவித்தார்கள். கர்நாடகாவின் வாக்காளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், பாஜகவுக்கு சரியான பாடம் புகட்ட இது சரியான சந்தர்ப்பம். கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு நிர்மலா சீதாராமன் எதுவும் செய்யவில்லை. மதம் மற்றும் சாதியின் பெயரில் மக்களை பிரிக்கவே முயற்சித்தார்கள். அவர்களை மாற்ற கர்நாடக மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்லின் போது மாநிலத்தின் 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அப்போது மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் மற்றும் மதஜ தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கர்நாடகாவில் பாஜகவும் மதஜவும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜக 25 தொகுதிகளிலும், மதஜ 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT