Published : 05 May 2024 12:54 PM
Last Updated : 05 May 2024 12:54 PM
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமை கோரலை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்றும், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அதன் பொருளாதாரம் கண்டுள்ள முன்னேற்றத்தைப் பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் இணைந்து கொள்ள விரும்புவார்கள் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா எதுவும் செய்யவேண்டியது இல்லை என்று நான் நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீரில் மாறியிருக்கும் கள யதார்த்தம் மற்றும் அங்கு வளர்ந்திருக்கும் பொருளாதார மாற்றம் மற்றும் அங்கு அமைதி திரும்பி இருக்கும் விதத்தைப் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்ள கோரிக்கை எழுப்புவார்கள் என்று நான் கருதுகிறேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்புவதால் அதனை கைப்பற்ற ராணுவ பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதுபோன்ற வேண்டுகோள் தற்போது அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்நாட்டின் அங்கமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். ஆனால் எப்போது என்று கூறமுடியாது. ஜம்மு காஷ்மீர் நிலைமையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏஎஃப்எஸ்பிஏ படை தேவைப்படாத ஒரு நாள் வரும். இது என்னுடைய எண்ணம். ஆனால் இதுகுறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்யவேண்டும்.
பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறார்கள். நாங்கள் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்." என்று தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாதிகளின் முகாம் மீது இந்தியாவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு ஆக.5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறுவதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து விரிசல் மேலும் தீவிரமடைந்தது.
பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாட்டு உறவை பேண விரும்புவதாக இந்தியா கூறிவரும் அதே வேலையில், விரோதம் மற்றும் தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பு என்று வலியுறுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT