Published : 05 May 2024 09:15 AM
Last Updated : 05 May 2024 09:15 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், ஹைதராபாத் மக்களவை தொகுதியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (எம்ஐஎம்) பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது.
தற்போது இங்கு அசதுத்தீன் ஒவைசி எம்பியாக உள்ளார். இவரை எதிர்த்து இங்கு இம்முறை பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். இவருக்கு முஸ்லிம் பெண்களின் பேராதரவு உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இம்முறை அசதுத்தீன் ஒவைசியா? மாதவி லதாவா? எனும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று அசதுத்தீன் ஒவைசி ஹைதராபாத்தில் மூசராம்பாக் பகுதியில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கிருந்த ஒரு அனுமன் கோயிலை தாண்டி செல்லும்போது, அவருடன் வந்த ஆதரவாளர்கள், அசதுத்தீனை ஆசீர்வதிக்கும்படி கோயில் பூஜாரியை கேட்டுக்கொண்டனர்.
இதற்கு சம்மதித்து அசதுத்தீன் ஒவைசியும் கோயில் நோக்கி வந்தார். அப்போது கோயில் அர்ச்சகர், ஒவைசிக்கு மாலை போட்டு, காவி பொன்னாடை போர்த்தி, அட்சதை தூவி ஆசீர்வதித்தார். இதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட ஒவைசி, அர்ச்சகருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து பிரச்சாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT