Published : 05 May 2024 09:06 AM
Last Updated : 05 May 2024 09:06 AM

காங்கிரஸின் ‘செல்வம் சமபகிர்வு' திட்டம் குறித்து ராகுல் காந்தியை பாராட்டிய பாக். முன்னாள் அமைச்சர்: பாஜக மூத்த தலைவர்கள் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸின் ‘செல்வம் சமபகிர்வு' திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் அகமது ஹூசைன் சவுத்ரி, ராகுல் காந்தியை பாராட்டி உள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசு நிலங்கள், நில உச்சவரம்பு சட்டத்தின்படி கிடைக்கும் கூடுதல் நிலங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பேசும்போது, “இந்தியாவின் 70%சொத்துகள் சுமார் 50 குடும்பங்களிடம் இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்றார்.

அயோத்தி குறித்த ராகுல் காந்தியின் வீடியோவை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும் இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவருமான பவாத் அகமது ஹூசைன் சவுத்ரி அண்மையில் தனது சமூக வலைதள கணக்கில் வெளியிட்டார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஒன்றிணைந்து மோடியையும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும். ராகுல் காந்தி அல்லது மம்தா பானர்ஜி அல்லது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இந்திய சிறுபான்மையினர் வாக்களிக்க வேண்டும். வெறுப்புணர்வை பரப்பும் பாஜகவை, தோற்கடிக்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு, சோஷலிஸ்ட் ஆவார். அவரை போலவே அவரது பேரன் ராகுல் காந்தியும் செயல்படுகிறார். இந்தியாவின் 70% சொத்துகள் சுமார் 50 குடும்பங்களிடம் குவிந்திருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தானிலும் இதேநிலை நீடிக்கிறது. முதலாளித்துவ உலகில் செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பது மிகப்பெரிய சவால். ராகுலின் சமபகிர்வு திட்டத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறும்போது, "ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புகின்றனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காங்கிரஸை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்" என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா கூறும்போது, “இம்ரான் கான் ஆட்சியில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பணியாற்றிய பவாத், ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுகிறார். பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறதா? அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்றே இருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x