Published : 04 May 2024 07:40 PM
Last Updated : 04 May 2024 07:40 PM
புதுடெல்லி: “மேற்கு வங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித் திட்டத்தை தீட்டியுள்ளது” என சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரும், அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் விளைநிலங்களை அபகரித்ததாகவும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததால், ஷாஜகான் ஷேக்கை திரிணமூல் காங்கிரஸ் 6 ஆண்டு இடைநீக்கம் செய்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில்,ஷாஜகான் ஷேக், அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பான ஒரு வீடியோவை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்பது மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று இரண்டு பேர் பேசுகின்றனர்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் ‘பிக் எக்ஸ்போஸ் ஆன் சந்தேஷ்காலி’ என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், “மேற்கு வங்கத்தை அசிங்கப்படுத்த பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. மேற்கு வங்கம் மற்றும் சந்தேஷ்காலியை இழுவுபடுத்த உள்ளூர் மக்களுக்கு பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமை பற்றிய தவறான கதையை சுவேந்து ஆதிகாரி உருவாக்கினார். இதனை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அதில், “மேற்கு வங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும், மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயற்சி செய்யவில்லை”என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அபிஷேக் பானர்ஜி, "சந்தேஷ்காலி ஸ்டிங் வீடியோவை பார்த்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். இது வெறுக்கத்தக்க செயல். வரலாற்றில் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தை எடுத்துக்காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உண்மையை திரித்து கூறலாம். ஆனால் அதற்கு ஆயுள் குறைவு. இறுதியில் உண்மையே வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டிய மேற்கு வங்க பிரச்சாரக் களத்தில் சந்தேஷ்காலி விவகாரம் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The shocking Sandeshkhali sting shows how deep the rot is within the BJP. In their hatred for Bengal's progressive thought & culture, the Bangla-Birodhis orchestrated a conspiracy to defame our state on every possible level.
Never before in the history of India has a ruling… https://t.co/50QUParP16— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT