Published : 04 May 2024 07:48 PM
Last Updated : 04 May 2024 07:48 PM
புதுடெல்லி: சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, முன்னாள் நகர நிர்வாக அமைச்சர் ராஜ் குமார் சவுகான் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் நீராஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தவாடே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் அனைவரும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததைச் சாடினர்.
தனக்கும், தனது சகாக்களுக்கும் கட்சியில் சேர வாய்ப்பளித்தற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அர்விந்தர் சிங் லவ்லி வாழ்த்தினார். மேலும் நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வார் என்று உறுதிபட தெரிவித்தார். இந்த தலைவர்களின் வருகையைப் பாராட்டிய ஹர்தீப் சிங் பூரி, இவர்களின் சேவையை பாஜக திறமையாக பயன்படுத்திக்கொள்ளும் என்றார்.
2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ஏப்.28-ம் தேதி ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், “ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளனர். ஆனால் அந்த கட்சியுடன் இன்னமும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லி காங்கிரஸ் தொண்டர்களின் நலனை காக்க முடியாததால், தலைவர் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை.
காங்கிரஸ் கட்சி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உருவான கட்சிதான் ஆம் ஆத்மி. அந்த கட்சியுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்ததை டெல்லி காங்கிரஸ் எதிர்க்கிறது. வடமேற்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உதித் ராஜ், வடகிழக்கு டெல்லியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கண்ணையா குமார் ஆகியோர் டெல்லிகாங்கிரஸ் கட்சிக்கு முற்றிலும் புதியவர்கள். இவர்களுக்கு சீட் வழங்கியது, டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காங்கிரஸாரின் கருத்துக்களை கட்சி மேலிடம் கேட்பதில்லை. சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கண்ணையா குமார் புகழ்கிறார். இதுபோன்ற மோசமான சிந்தனை, தவறான கருத்துக்கள் டெல்லி காங்கிரஸ் தொண்டர்களுடன் ஒத்துப்போகவில்லை. டெல்லி காங்கிரஸ் தலைவராக நான் எடுத்த பல முடிவுகளை டெல்லி பொறுப்பாளர் தீபக்பாப்ரியா தடுத்து விட்டார். டெல்லி காங்கிரஸில் என்னால் எந்த நியமனங்களையும் செய்ய முடியவில்லை” என்று அர்விந்தர் சிங் லவ்லி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
பாஜகவை எதிர்த்து போட்டியிட இண்டியா கூட்டணி கடந்தாண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்திரி ஆகியோர் ஏற்கனவே வெளியேறி பாஜகவுடன் இணைந்து விட்டனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து டெல்லியில் 4:3 என்ற விகிதத்தில் தொகுதி பங்கீடு செய்து கொண்டது.
மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி,கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியும், வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்தன. இதை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சில காலம் பாஜகவில் இருந்த அரவிந்தர் சிங் லவ்லி கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இப்போது மீண்டும் அவர் இரண்டாவது முறையாக பாஜகவில் இணைந்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT