Published : 04 May 2024 06:13 PM
Last Updated : 04 May 2024 06:13 PM

தென் தமிழகம் உட்பட இந்திய கடலோர பகுதிகளுக்கு மே 6 வரை கடல் அலைச் சீற்ற எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: தொலைதூர இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் உயர் அலை பெருக்கம் காரணமாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) தெரிவித்துள்ளது. இந்தக் கடல் சீற்றம் சனிக்கிழமை முதல் இம்மாதம் 6-ம் தேதி வரையில் இருக்கும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த விஞ்ஞானிடி.பாலகிருஷ்ணன் நாயர் கூறும்போது, "இந்திய கடற்பகுதியில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அடலாண்டிக் பெருங்கடலில் தோன்றிய இந்த உயர் கால அலை பெருக்கம் மெதுவாக தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நகர்வு இந்தியக் கடலோர பகுதிகளில் உயர் அலைச் சீற்றங்களுக்கு வழி வகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

“இந்தக் காலகட்டதில், கடல் அலைகள் 0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயர்வடையும், கடலோரப் பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாழ்வாக உள்ள கடலோரப் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும். நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்" என்று கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக கடலோரப் பகுதிகளுக்கான எச்சரிக்கை:

ரெட் அலர்ட்: கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் தென் தமிழகம்: 0.5 மீட்டர் முதல் 1.7 மீட்டர் வரை அலை சீற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி முற்பகல் 11.30 மணி முதல் மே 5-ம் தேதி இரவு 11.30 மணி வரை குறிப்பிட்ட இடைவெளியில் கடல் சீற்றமும், உயர் அலைகளும் ஏற்படலாம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்: மே 4-ம் தேதி முற்பகல் 11.30 மணி முதல் மே 5-ம் தேதி இரவு 11.30 மணி வரை சீற்றத்தின்போது அலைகள் 0.5 மீட்டர் முதல் 2.0 மீட்டர் வரை அலைகள் உயர்வடையலாம்.

ஆரஞ்ச் அலார்ட்: கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா: கடல் சீற்றத்தின்போது, அலைகள் 0.5 மீட்டர் முதல் 1.5 மீட்டர் வரை உயரும். மே 4-ம் தேதி முற்பகல் 11.30 மணி முதல் மே 5-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும்.

குஜராத்: மே 4-ம் தேதி மாலை 5.30 மணி முதல் மே 5-ம் தேதி இரவு 11.30 மணி வரை அலை சீற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அலைகள் 0.5 மீட்டர் முதல் 1.4 மீட்டர் வரை உயரும் கடல் கொந்தளிப்பு இருக்கும்.

ஆந்திரப் பிரதேசம்: மே 4-ம் தேதி மாலை 5.30 மணி முதல் மே 5ம் தேதி இரவு 11.30 மணி வரை 0.5 மீட்டர் முதல் 1.2 மீட்டர் வரை கடல் சீற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்: கடல் சீற்றத்தின்போது அலைகள் 0.5 மீட்டர் முதல் 1.2 மீட்டர் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மே 5-ம் தேதி பகல் 12.30 முதல் மே 6-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் கொந்தளிப்பும் இருக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அலைகளின் சீற்றம் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறிய கப்பல்கள் கரையோரம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அலையின் சீற்றத்தினால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தகுந்த இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் நடைபெறும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x