Last Updated : 04 May, 2024 04:55 AM

1  

Published : 04 May 2024 04:55 AM
Last Updated : 04 May 2024 04:55 AM

கேரள மாநிலம் வயநாடு தொகுதியை தொடர்ந்து உ.பி. ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி

ரேபரேலியி வேட்புமனு தக்கால் செய்தார் ராகுல் காந்தி.

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது தாய்சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா வதேரா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உ.பி.யில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கின்றன. இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் 2 தொகுதிகளுக்கு மட்டும் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. இவை, காங்கிரஸ் செல்வாக்கு மிஞ்சியிருக்கும் தொகுதிகளாகக் கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி ஆகும்.

இதுவரை 17 மக்களவைத் தேர்தலை ரேபரேலி சந்தித்துள்ளது. இதில் 14 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இங்கு 2004 முதல்எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, தனது உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அருகில் உள்ள அமேதி தொகுதி இதுவரை 16 மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2004 முதல் இங்கிருந்து ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அதேசமயம், 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அங்கு வென்றார். தற்போது மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார்.

அமேதி, ரேபரேலியில் மீண்டும் காந்தி குடும்பம் போட்டியிடுமா என்ற கேள்வி நீடித்து வந்தது. அமேதியில் ராகுல், ரேபரேலியில் அவரது சகோதரி பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. பிறகு, அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வத்ரா போட்டிடுவார் என்றும் தகவல் வெளியானது.

ராபர்ட் வதேராவும் இங்கு போட்டியிட தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். வேட்புமனு தாக்கலின் இறுதிநாள் வரை நீடித்த சர்ச்சை நேற்று காலை முடிவுக்கு வந்தது. ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அமேதி வந்தனர். அமேதியில் கிஷோரி லால் சர்மா தனது வேட்புமனுவை மதியம் 12.15 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, பிரியங்கா வதேராவும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் உடனிருந்தனர். முன்னதாக, அமேதியில் சிறிய அளவில் ஊர்வலம் நடத்தப்பட்டது. பிறகு பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டு ரேபரேலி சென்றார்.

ரேபரேலியில் ஹாத்தி பூங்காவில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் ஊர்வலமாகப் புறப்பட்டார். அவருடன் சகோதரி பிரியங்கா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இருந்தனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி மதியம் 2.15 மணிக்கு ரேபரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்குகாங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து, சோனியா, கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் முன்னிலையில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுலுக்கு சற்று நேரத்துக்கு முன்பாக பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். சோனியா 2004-ல்மகனுக்காக அமேதியிலிருந்து ரேபரேலிக்கு மாறினார். தற்போது ராகுல் ரேபரேலியில் போட்டியிடுகிறார்.

அமேதியில் கே.எல்.சர்மா... அமேதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிஷோரி லால் சர்மா (63), காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் சர்மா, லூதியானாவை சேர்ந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலாகவுலின் உறவினரான இவர்,ராஜீவ் காந்திக்காக 1984-ல் ரேபரேலியில் தேர்தல் பணியை தொடங்கினார். பிறகு கேப்டன் சதீஷ் சர்மாவின் தேர்தல் பிரதிநிதியாகவும் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x