Published : 03 May 2024 03:18 PM
Last Updated : 03 May 2024 03:18 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை கருத்தில் கொண்டு வகுத்துள்ளது. இந்த முடிவு பாஜகவை, அதன் ஆதரவாளர்களை கலங்கடித்துள்ளது.
பாஜகவின் சாணக்கியர் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமித் ஷாவுக்கு அமேதியை பரம்பரை தொகுதி என்று இனி விமர்சிக்க முடியாமல் போனதால் எப்படி எதிர்வினையாற்றுவார் என்று தெரியவில்லை. ரேபரேலி தொகுதி சோனியா காந்திக்கு மட்டும் சொந்தமானதாக இருந்ததில்லை. அது இந்திரா காந்தியும் பிரதிநிதித்துவப் படுத்திய தொகுதி. இது வழிவழியாக வந்தது அல்ல. இது ஒரு பொறுப்பு. கடமையாகும்.
காந்தி குடும்பத்தின் வலுவான தொகுதிகள் அமேதி, ரேபரேலி மட்டுமல்ல வடக்கில் இருந்து தெற்கே வரை ஒட்டுமொத்த இந்தியாவும் வலுவான தொகுதிகள் தான். ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் இருது 3 முறையும், கேரளாவில் இருந்து ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடிக்கு ஒருமுறையாவது விந்திய மலையைத் தாண்ட தைரியம் இருக்கிறதா?
பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நரேந்திர மோடியின் பொய்களை ஒற்றை ஆளாக எதிர்கொண்டு வருகிறார். அதனால் தான் அவரை ஒற்றைத் தொகுதிக்குள் மட்டும் அடைத்துவிட காங்கிரஸ் விரும்பவில்லை. பிரியங்கா காந்தி ஏதேனும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு வருவார்.
பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியின் ஒரே அடையாளம் அவர் அமேதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டர் என்பது மட்டுமே. இப்போது அந்த அரசியல் முக்கியத்துவம் கூட அவருக்கு இல்லாமல் போனது” என்று பதிவிட்டுள்ளார்.
ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே நாளில் ராகுல் காந்தி அத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT