Published : 03 May 2024 11:29 AM
Last Updated : 03 May 2024 11:29 AM

சோனியா, பிரியங்கா, காங்., மூத்த தலைவர்கள் சூழ ரேபரேலி வந்தடைந்த ராகுல் காந்தி

ரேபரேலி: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரேபரேலியில் இன்றே (மே.3) வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி.

இதற்காக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, தாயார் சோனியா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோருடன் தனி விமானம் மூலம் உ.பி. வந்தடைந்தார். இவர்களைத் தவிர காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. தெலங்கானா முதல்வர் ஆகியோரும் ரேபரேலி புறப்பட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ராகுல் காந்தி ரேபரேலியில் ரோடு ஷோ மேற்கொள்வார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்தான தொகுதிகள்: உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

1980ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004ல் முதன்முறையாக களம் இறங்கினார்.

அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019ல் ராகுலை தோற்கடித்தார்.

கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இப்போது ராகுல் காந்தி ரேபரேலியில் களமிறங்குகிறார். அவருக்கு ரேபரேலி வெற்றி மாலை கொடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x