Published : 03 May 2024 06:35 AM
Last Updated : 03 May 2024 06:35 AM

இடஒதுக்கீட்டை பறிக்கிறது மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனியார்மயத்தை அமல்படுத்தி இடஒதுக்கீட்டை பறிக்கிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான பிரச்சார மந்திரம் என்னவெனில், இனி அரசு வேலையும் இருக்காது இடஒதுக்கீடும் இருக்காது என்பதுதான்.

அரசு பணியிடங்களை குறைத்து, தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான மத்திய அரசு பறிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது (2013-ம் ஆண்டு) பொதுத் துறை நிறுவனங்களில் 14 லட்சம் நிரந்தர பணியிடங்கள் இருந்தன.

இது இப்போது வெறும் 8 லட்சமாக உள்ளது. பிஎஸ்என்எல், செயில், பெல் உள்ளிட்ட முக்கியமான பொதுத் துறை நிறுவனங்களில் மட்டும் சுமார் 6 லட்சம் நிரந்தர பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் இருந்திருந்தால் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமானோர் பயனடைந்திருப்பார்கள்.

ரயில்வே உள்ளிட்ட மேலும் சில துறைகளில் அரசுப் பணி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இத்தகைய நிறுவனங்களில் பின்வாசல் வழியாக எத்தனை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவில்லை. ‘தனியார்மயமாக்கல்' என்ற மோடி மாடல் என்பது நாட்டின் வளங்களை சூறையாடுவதாகும். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என்பது காங்கிரஸின் உத்தரவாதம். காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவதன் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படும் என்றும் காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x