Published : 03 May 2024 09:46 AM
Last Updated : 03 May 2024 09:46 AM
கொல்கத்தா: மேற்குவங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் மீது ஆளுநர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆனந்தா போஸ் ஆளுநர் மாளிகை பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றஞ்சாட்டினர். கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளதை மேற்கோள் காட்டி அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஆளுநர் மாளிகையில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் தான் மட்டுமல்லாது தன்னைப்போல் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் உண்மையிலேயே பெண் சக்தியை நம்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளது.இருப்பினும் மேற்குவங்க ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் இந்தக் குற்றசாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “உண்மை வெல்லும். இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட புனைவுகளால் என்னை அடக்கிவிட முடியாது. என் மீது களங்கம் சுமத்துவதன் மூலம் யாரேனும் தேர்தல் ஆதாயம் அடைய விரும்பினால் அவர்களுக்கு எனது ஆசிர்வாதங்கள். ஆனால் நான் ஊழல், வன்முறைக்கு எதிர்த்து செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT