Published : 03 May 2024 06:14 AM
Last Updated : 03 May 2024 06:14 AM

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்; காவல் துறையினருக்கு மாநில அரசுகள் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்.

புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள நேர்மறையான அம்சங்களையும் மேம்படுத்தப்பட்ட மாற்றங்களையும் நாட்டின் அனைத்து காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்க இந்திய அரசு முனைகிறது. இதற்கான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் புதிய சட்டங்கள் குறித்த சரியான புரிதலுடன் சரியான முறையில் தன்னம்பிக்கையும் நடைமுறைப்படுத்துவார்கள்.

இந்திய அரசின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு ஏற்றார்போல் இந்த பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி தளத்தில் இதற்குரிய பாடப்பிரிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திட புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய ஆன்லைன் பாடங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x