Last Updated : 22 Apr, 2018 01:41 PM

 

Published : 22 Apr 2018 01:41 PM
Last Updated : 22 Apr 2018 01:41 PM

‘ ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டவிரோதமானது’’ - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது அரசியல்சாசனதுக்கு எதிரானது, அதை அமைக்க கூடாது என்று பிரதமர் மோடிக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம் இடையே கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. இதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்க விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான ஸ்கீமை அமைக்க வேண்டும் என்ற உத்தரவிட்டது.

ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து 3 மாத அவகாசம் கேட்டுள்ளது. ஆனால், ஸ்கீம் குறித்த வரைவை மே மாதம் 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் செய்கிறது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டு வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக்தில் கடந்த வாரங்களில் தீவிரமான போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கும் கறுப்புக்கொடி காட்டிப் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி அவர்களே, நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச விருப்பப்படுகிறேன். அந்தச் சந்திப்பு மிக விரைவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். ஏனென்றால், மத்தியஅரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வரைவு ஸ்கீமை உருவாக்குவது தொடர்பாக கடந்த வாரம் நாங்கள் இரு திட்டங்கள் அனுப்பி இருந்தோம். அது குறித்து உங்களிடம் பேச விரும்புகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்பதே அரசியல்சாசனத்துக்கு விரோதமானது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

காவிரி நதிநீர் நடுவர்மன்ற தீப்பாயத்தின் தீர்ப்பு என்பது உத்தரவு கிடையாது அது பரிந்துரைகள் மட்டுமே. காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்ற திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகத்தான் ஸ்கீம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது வாரியம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. இதுபோன்ற அமைப்பை உருவாக்குவது என்பது, இந்திய அரசியல்சாசனத்தின் கூட்டாச்சி முறையைச் சீர்குலைத்துவிடும். மாநில அரசின் நீர்மேலாண்மைக்கான அதிகாரத்தைப் பறிக்கும் விதத்தில் அமைந்துவிடும் .

இவ்வாறு அந்த கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x