Published : 25 Apr 2018 09:51 AM
Last Updated : 25 Apr 2018 09:51 AM

திருப்பதி அறங்காவலர் குழு நியமன விவகாரம்: முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா வலியுறுத்தல்

திருப்பதி அறங்காவலர் குழு நியமன விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியுமான நடிகை ரோஜா நேற்று காலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு நியமனம் குறித்து, முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது பெரும் விவாதம் நடைபெறுவது துரதிருஷ்டவசமானது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநில அமைச்சரின் மனைவி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பந்தி மற்றும் வேற்று மதத்தவர் இப்போதைய அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பல கோடி இந்து மக்களின் மனோபாவத்தை புரிந்து கொண்டு அறங்காவலர் குழு அமைப்பது முக்கியம். ஆனால், பிரச்சினைக்குரிய ஓர் அறங்காவலர் குழுவை முதல்வர் ஏன் நியமனம் செய்தார் என்பதை மக்களுக்கு அவர் தெரியப்படுத்த வேண்டும். திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது.

இதற்கு முன்புகூட விஜயவாடாவில் பல இந்து கோயில்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக இடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சமீபத்தில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ஆகியவற்றில் அடிக்கடி பரிகார பூஜைகள் நடப்பதும் பெரும் விவாதமானது. இதுகுறித்து பல மடாதிபதிகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவானது. இதுபோன்ற சர்ச்சையை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு ரோஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x