Published : 02 May 2024 01:38 PM
Last Updated : 02 May 2024 01:38 PM

“ராகுல் காந்தியை இந்திய பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது” - பிரதமர் மோடி விமர்சனம்

ஆனந்த் (குஜராத்): "பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்" என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ஹூசைன், ராகுல் காந்தியை பாராட்டி பேசிய சில நாட்களுக்கு பின்னர் பிரதமர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில் இன்று (மே 2) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறுகையில், "காங்கிரஸ் கட்சி இங்கே வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் அங்கே அழுகிறார்கள். காங்கிரஸின் இளவரசரை (ராகுல் காந்தி) இந்தியாவின் பிரதமராக்க பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை பின்பற்றுவதாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் அரசியல் சாசனத்தை தனது தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறார். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அரசியல்சாசனம் ஒரே மாதிரி செயல்படுத்தப்படவில்லை. காஷ்மீருக்கு அரசியல் சாசனம் பொருந்தாது. அங்கு சட்டப்பிரிவு 370, சுவர் போல தடையாக இருந்தது. நாங்கள் அதனைத் தகர்த்தோம்.

நாடு 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியின் கீழ் இருந்தது. பாஜகவின் சேவைக் காலம் 10 ஆண்டுகளே. காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சியில், 60 சதவீத கிராம மக்களுக்கு கழிப்பறை வசதி கிடைக்கவில்லை. பாஜக 10 ஆண்டு கால ஆட்சியில் அதனைச் சாதித்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் 14 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கியிருக்கிறோம். காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் 3 கோடி பேருக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டிருந்தது.

நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க அவர்கள் தயாரா?

நான் பல ஆண்டுகளாக குஜராத்துக்காக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2014ம் ஆண்டு நாட்டுக்கு சேவை செய்ய என்னை நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். குஜராத்தில் நான் வேலை செய்த போது, நம்மிடம், குஜராத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரம் இருந்தது. எனக்கு ஒரே ஒரு கனவு தான் இருக்கிறது. வரும் 2047-ல் இந்திய சுதந்திரத்தின் 100 வது ஆண்டைக் கொண்டாடும் போது நாடு விக்சித் பாரதமாக இருக்க வேண்டும். 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க 24X7 உழைப்பேன். இது எனது உத்திரவாதம்". இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x